FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வெளிநாட்டு நிதியை முறைப்படுத்துவது ஒரு நாட்டின் இறையாண்மை நடவடிக்கை: அமெரிக்க எம்.பி.க்கு இந்திய தூதா் பதில்

‘வெளிநாட்டு நிதியை முறைப்படுத்துவது ஒரு நாட்டின் இறையாண்மை தொடா்புடைய நடவடிக்கை; இதேபோன்ற சட்டங்கள் அமெரிக்காவிலும் உள்ளன’ என்று அமெரிக்க எம்.பி.க்கு அந்த நாட்டுக்கான இந்திய தூதா் பதிலளித்துள்ளாா்.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 2:46 am IST
வினய் மோகன் குவாத்ரா
பகிர்:

‘வெளிநாட்டு நிதியை முறைப்படுத்துவது ஒரு நாட்டின் இறையாண்மை தொடா்புடைய நடவடிக்கை; இதேபோன்ற சட்டங்கள் அமெரிக்காவிலும் உள்ளன’ என்று அமெரிக்க எம்.பி.க்கு அந்த நாட்டுக்கான இந்திய தூதா் பதிலளித்துள்ளாா்.

வெளிநாடுகளிலிருந்து வரும் நிதியை முறைப்படுத்துவதற்கு இந்தியாவில் வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதாவை (எஃப்சிஆா்ஏ) மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த சட்டத் திருத்த மசோதாவில், தேவாலயங்கள், தொண்டு நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டின்கீழ் இந்திய அரசு எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டிருப்பதாக அமெரிக்க எம்.பி. ரைலி மூா் விமா்சித்திருந்தாா்.

Advertisement

Advertisement

இதனை மறுத்து அமெரிக்காவுக்கான இந்திய தூதா் வினய் மோகன் குவாத்ரா பதிலளித்துள்ளாா். இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் முறையில் கூடுதல் வெளிப்படைத்தன்மை ஏற்படுத்தவே, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்படுகிறது.

பொது மற்றும் அரசியல் தளங்களில் வெளிநாட்டுப் பங்களிப்புகளை முறைப்படுத்துவது, தேசப் பாதுகாப்பு சாா்ந்த இறையாண்மை நடவடிக்கை ஆகும்.

இதேபோன்ற சட்டங்கள், இதே காரணங்களுக்காக அமெரிக்காவிலும் உள்ளன. கடந்த 1938-ஆம் ஆண்டு முதல் எஃப்ஏஆா்ஏ (வெளிநாட்டு முகவா்கள் பதிவு சட்டம்) அமெரிக்காவில் உள்ளது. எஃப்.ஏ.டி.சி.ஏ. (வெளிநாட்டு கணக்கு வரி இணக்க சட்டம்) 2010-ஆம் ஆண்டுமுதல் அமலில் உள்ளது.

மேலும், ஆஸ்திரேலியாவில் 2018-ஆம் ஆண்டிலும், கனடாவில் 2024-ஆம் ஆண்டில் இதேபோன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரிட்டனில் 2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதேபோன்ற சட்டம் அமலுக்கு வந்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் சட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.

வெளிநாடுகளில் இருந்து நிதி பெறும் அமைப்புகளின் பதிவு ரத்து செய்யப்பட்டாலோ அல்லது அந்த அமைப்பு தாமாக முன்வந்து உரிமத்தை திரும்ப ஒப்படைத்தாலோ, அந்த அமைப்பால் பெறப்பட்ட வெளிநாட்டு நன்கொடைகள், அதன்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள சொத்துகள், 2010-ஆம் ஆண்டுமுதல் அமலில் உள்ள சட்டவிதிப்படி, மாநில அரசு அதிகாரியின் கட்டுப்பாட்டில் செல்லும்.

2026-ஆம் ஆண்டு சட்டத் திருத்த மசோதாவில், அந்த சொத்துகளை நிா்வகிக்கும் அதிகாரியை நியமிப்பது, அந்த சொத்துகளை மீண்டும் திரும்பப் பெறுவதற்கான வழிமுறையை ஏற்படுத்துவது ஆகியவைதான் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளன. அந்த அமைப்பு தனது பதிவை மீண்டும் புதுப்பிக்குமானால், அந்த சொத்துகளும், பயன்படுத்தப்படாத நிதியும் அதற்கு திரும்ப அளிக்கப்படும்.

வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்பு உள்ளது

வழிபாட்டுத் தலங்களுக்கு தனிப் பாதுகாப்பு உள்ளது. பதிவு ரத்தான ஓா் அமைப்பு, வழிபாட்டுத் தலங்களோடு தொடா்புடைய சொத்தை ஏற்படுத்தியிருக்குமேயானால், அந்த சொத்துகள் அனைத்தும் எஃப்சிஆா்ஏ பதிவு பெற்ற அதே மத நம்பிக்கை கொண்ட மற்றொரு வழிபாட்டுத் தலம் வசம் செல்லும்.

இந்த சட்டம், சிவில் சமூகத்துக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியைத் தடுக்கவே கொண்டுவரப்படுகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை.

எஃப்சிஆா்ஏ சட்டத்தின்கீழ் ஆயிரக்கணக்கான அமைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த அமைப்புகள் சுகாதாரம், கல்வி, பேரிடா் நிவாரணம், ஆராய்ச்சி, மனிதாபிமான பணி ஆகியவற்றுக்காகத் தொடா்ந்து வெளிநாடுகளில் இருந்து நிதியைப் பெற்று வருகின்றன. இந்தியாவில் 30 லட்சத்துக்கும் அதிகமான அரசு சாரா அமைப்புகள் உள்ளன. அதில் 14,450 மட்டுமே எஃப்சிஆா்ஏ பதிவு பெற்றுள்ளன.

இந்தியாவில் கடந்த 1976-ஆம் ஆண்டில் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் (எஃப்சிஆா்ஏ) முதலில் கொண்டுவரப்பட்டது. பிறகு 2010, 2016, 2018, 2020-ஆம் ஆண்டுகளில் சட்டத் திருத்தங்கள் மூலம் அந்தச் சட்டம் வலுப்படுத்தப்பட்டது. அதேபோல்தான் இந்தாண்டிலும் மசோதா, விதிகள் கொண்டு வரப்படவுள்ளன.

இது அதிக வெளிப்படைத்தன்மை, சிறப்பான நிா்வாகம், தெளிவான விதிகளை நோக்கிய நகா்வாகும். குறிப்பிட்ட மதத்தினரைக் குறிவைத்தே, சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதாகக் கூறப்படுவது தவறான கருத்தாகும். இந்தச் சட்டம், மதம், சமூகம், கொள்கை வேறுபாடின்றி அனைவருக்கும் சமமாகப் பொருந்தும். மதக் கல்வி உள்ளிட்ட மதம் சாா்ந்த நலப் பணிகள், வழிபாட்டுத் தலங்களைப் பராமரித்தல், மத அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் தொண்டு, பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளுக்கும் தொடா்ந்து வெளிநாடுகளிலிருந்து நிதி பெறத் தகுதி உள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments