FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பூர்வகுடி இனக்குழுக்களே முதல் விடுதலைப் போராட்ட வீரர்கள்!நீதியும் நியாயமும் - 2

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்துப் போரிட்ட பூர்வகுடி இனக்குழுக்களே முதல் சுதந்திர போராட்டக்காரர்கள் என்பது பற்றி..

27 ஆகஸ்ட் 2026, 3:18 pm IST
பிர்சா முண்டா - மெக்காலே - டிபிஎஸ்
பகிர்:

லார்டு மெக்காலே என்ற பெயரை அறியாத இந்தியர்கள் யாரும் இருக்க முடியாது. கல்வியில் சமஸ்கிருதம், அரபு மொழிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில், அதை மடைமாற்றம் செய்து அதிக அளவிலான நிதியை ஆங்கிலவழிக் கல்விக்கு ஒதுக்கீடு செய்து, கல்வி நிலையங்களை உருவாக்கி, கல்வியைப் பரவலாக்கம் செய்தவர்தான் லார்டு தாமஸ் பாபிங்டன் மெக்காலே (Thomas Babington Macaulay). 1835-ஆம் ஆண்டு இந்தியக் கல்விக் கொள்கையை (Minute on Indian Education) உருவாக்கினார். ‘நவீன இந்தியக் கல்விக் கொள்கையின் தந்தை’ என்று வரலாறு இவரைப் பதிவு செய்கிறது.

லார்டு தாமஸ் பாபிங்டன் மெக்காலேவுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. இவர்தான் இந்தியத் தண்டனைச் சட்டத்தையும் உருவாக்கியவர். 1860-இல், 23 தலைப்புகளில் 511 பிரிவுகளை உள்ளடக்கிய, இந்திய தண்டனைச் சட்டத்தை எழுதி நிறைவு செய்தார். இந்தச் சட்டம் 1862 - ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளைக் கொண்டு எல்லா வகையான குற்றங்களையும் தடுக்க முடியும் என்ற போதிலும், அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த 10 ஆண்டுகளுக்குள், 1871ஆம் ஆண்டு குற்றப்பழங்குடிகள் சட்டம் என்ற கொடிய சட்டத்தையும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நடைமுறைக்குக் கொண்டுவந்தார்கள்.

தெற்காசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் என உலகின் பரப்பளவில் நான்கில் ஒரு பங்கு நிலத்தை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதிகார வெறி, எந்நேரமும் கிளர்ச்சி எழக் கூடும் என்ற அச்சம் போன்ற காரணிகளால்; தங்களது காலனி நாடுகள் மீது சட்டங்களைக் கடுமையாக்கினார்கள். பரந்துபட்ட இந்தியாவில் வாழ்ந்த பல்வேறு பூர்வகுடி இனக்குழுக்கள், பிரிட்டிஷ் ஆட்சி நிர்வாகத்தை ஏற்க மறுத்தனர். இந்த இனக் குழுக்களைப் புரிந்து கொள்வதில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

பிரிட்டிஷ் காலனி ஆட்சியை எதிர்த்த நாடோடிகள், அரை நாடோடிகள், மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்த இனக்குழுக்கள் உள்ளிட்ட பூர்வகுடி மக்கள் அனைவரையும் கட்டுப்படுத்துவதற்காக அவர்களைப் பிறப்பால் குற்றவாளிகள் என குற்றப்பழங்குடிகள் சட்டத்தால் வரையறை செய்தனர். லட்சக்கணக்கான மக்களின் நடமாட்டத்தைப் பதிவு செய்வதும் அவர்களைக் கண்காணிப்பதும்தான் இந்தச் சட்டத்தின் நோக்கம். வடகிழக்கு மாநிலங்களில் முதலில் நடைமுறைக்கு வந்த இந்தச் சட்டம், பின்னர் நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டது.

நாடு முழுவதும் 1526 இனக் குழுக்கள் குற்றப் பழங்குடிகள் சட்டத்தின் கோரப்பிடிக்குள் கொண்டுவரப்பட்டன. இவர்களால் சுதந்திரமாக நடமாட முடியாது. இரவில் சுதந்திரமாக உறங்க முடியாது. எப்போதும் காவல் கண்காணிப்பிற்குள் இருந்தாக வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகளை பூர்வகுடி இனக்குழுக்கள் கடுமையாக எதிர்த்து நின்றன. தங்களது விவசாய நிலத்திற்குள் அந்நியர்கள் நுழையத் தடை விதித்தார்கள். வரி கட்ட மறுத்தார்கள். அந்நிய ஆட்சியாளர்களை எதிர்த்த முதல் இந்திய விடுதலைப் போராட்டக்காரர்கள் இந்தப் பூர்வகுடி இனக் குழுக்கள்தான். இதனால் இவர்கள் எதிர்கொண்ட கொடுமைகளும் கொலைகளும் ஏராளம். இந்த பூர்வகுடி மக்களின் இழப்புகள், துயரங்கள் வரலாற்றில் பேசப்படவே இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் 68 இனக்குழுக்கள் இந்தக் கொடுஞ்சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஜார்க்கண்ட் பூர்வகுடியைச் சேர்ந்த பிர்சா முண்டா (Birsa Munda) பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடினார். பிரிட்டிஷ் காலனி ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். ராஞ்சி சிறையில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பிர்சா முண்டா, 1900 ஆம் ஆண்டு 25 வயதில் கொல்லப்பட்டார். அவர் சிறையில் கொல்லப்பட்டதாக வரலாற்றில் பதிவுகள் இருக்கிறது. இதே காலகட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களது நிலத்தில் அந்நியர்கள் ஆதிக்கம் செய்வதற்கு எதிராகப் போராடி, மடிந்த ஆயிரக்கணக்கான பூர்வகுடிகளின் தியாகங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் பிறமலைக் கள்ளர்கள் அனுபவித்த கொடுமைகள் சொல்லில் அடங்காதவை. அந்தச் சமூகத்தில் பிறந்த சிலர், பின்னாளில் அரசியல் தலைமைப் பொறுப்பிற்கு வந்த காரணத்தால் மட்டுமே பெருங்காமநல்லூர் தியாகிகளின் வரலாறு பேசப்படுகிறது. இல்லையென்றால், அதுவும் மண்மேடாகி இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பில், மாவட்ட நீதிபதி ஒருவர் பேசும்போது, ‘நான் இந்தப் பொறுப்பிற்கு வந்துவிட்டேன். ஆனால், என் இனத்தின் மீது பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் குத்திய குற்றப்பரம்பரை முத்திரையால், இழைத்த கொடுமைகளால், நான் இன்னமும் அவமானத்தால் கூனிக் குறுகுகிறேன், அவற்றை நாங்கள் ஒருபோதும் மறக்க இயலாது’ என்றார். ஒவ்வோர் இனக்குழுவிலும் இதுபோன்ற மனக்காயங்கள் கனன்றுகொண்டே இருக்கின்றன.

காடுகளையும் மேடுகளையும் நேர்த்திசெய்து, விவசாய நிலமாக மாற்றி, மண்ணைக் கிளறுவதையே தங்களது வாழ்வாகக் கொண்டிருந்த ஒரு சிறிய இனக்குழு ஊராளி. தங்கள் நிலங்களைப் பாதுகாப்பதற்காக வில்லையும் அம்பையும் கையாளத் தெரிந்தவர்கள். இதனாலேயே அவர்கள் குற்றப்பரம்பரை எனக் குற்றவாளி ஆக்கப்பட்டனர். ஒவ்வோர் இனக்குழுவுக்கும் தொழில்நுட்ப அடிப்படையில் ஒரு தனித்துவம் இருந்தது. அந்தத் தனித்துவம்தான் ஆட்சியாளர்களை அவர்களுக்கு எதிராக மாற்றியது.

தேங்காய்த்தண்ணிப்பட்டி. புதுக்கோட்டை மாவட்டத்தின் மேற்கு எல்லையில் இருக்கும் ஒரு சிறிய கிராமம். அந்த ஊரில் உள்ள மழப்பங்குழித் தண்ணீர் ஒரு காலத்தில் செவ்விளநீருக்கு இணையான சுவையில் இருக்குமாம். மணப்பாறையில் இருந்து கொடும்பாளூர் வழியாக, புதுக்கோட்டை செல்பவர்கள் இந்தக் கிராமத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். 1930-களுக்கு முன்பு இங்கு இரும்புப் பொருள்கள் செய்யக் கூடிய தொழிலாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆம்! இருந்திருக்கிறார்கள். மனிதர்களின் அன்றாடப் பயன்பாட்டு இரும்புப்பொருள்கள், பாதுகாப்புச் சாதனங்கள் செய்வதுதான் அவர்களுடைய வேலை. அவர்களுக்கு அந்த வேலையைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அவர்கள் செய்த பொருள்களுள் முதன்மையானது பூட்டு. என் தாய் வழிச் சீதனமாக எங்கள் வீட்டில் ஒரு பூட்டு இருக்கிறது. அது வாழ்ந்து மறைந்த ஓர் இனத்தின் வரலாறாகவும் எச்சமாகவும் இருக்கிறது.

கதவில் தொங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பூட்டிற்கு உரிய சாவியை; ஒருவரிடம் கொடுத்து திறக்கச் சொன்னால், அவரால் திறந்துவிட முடியாது. அந்தப் பூட்டின் நுட்பத்தை அறிந்தவர்கள் மட்டுமே அதைக் கையாள முடியும். சாவியின் துவாரம் வெளிப்படையாகத் தெரியாது. முதலில் மறைமுகமாகப் பொருத்தப்பட்டிருக்கும் இரும்புத் தகட்டை நகர்த்த வேண்டும். பூட்டைக் கைக்குள் அடக்கி, நான்கு விரல்களையும் ஓர் இணைப்பில் அழுத்தினால்; சாவிக்கான துவாரம் திறக்கும். அதன் பிறகு துளை கொண்ட சாவியைப் பூட்டின் துவாரத்தில் அழுத்தி,நேர் மறையாகத் திருகி மீண்டும் உள்நோக்கி அழுத்தி, எதிர்மறையாகத் திருகினால் பூட்டு திறக்கும். இந்த நுட்பத்திற்கு இணையான வேறு ஒரு பூட்டை நான் எங்கும் பார்க்கவில்லை. ஒரு குக்கிராமத்தில் வாழ்ந்த தொழிலாளர்களிடம் இருந்த இந்தத் தொழில்நுட்ப அறிவு அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படவில்லை. இந்த நாட்டில் ஓர் ஏகலைவனின் கட்டை விரல் மட்டும் வெட்டப்படவில்லை. வரலாறு நெடுகிலும் ஏராளமான ஏகலைவன்களின் கட்டை விரல்கள் வெட்டப்பட்டிருக்கின்றன.

புதுக்கோட்டை சமஸ்தானம் தனிநாடாக இருந்தபோதிலும் அது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. மிக நுட்பமான இரும்பாலான கருவிகளைச் செய்யக் கூடிய தொழிலாளர்களால் ஆயுதங்களையும் உருவாக்க முடியும் என்பதை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் உணர்ந்தனர். மன்னர்களின் பெரும்படைகளுக்கு அஞ்சாத பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள்; தேங்காய்த்தண்ணிப்பட்டி போன்ற குக்கிராமங்களில் வாழும் எளிய தொழிலாளர்களிடம் இருந்த தொழில்நுட்பத்திற்கு அஞ்சினார்கள். அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயன்றனர். இயலாத நிலையில், தங்கள் ஆட்சிக்கு ஆபத்தானவர்கள் என்று வரையறுத்தார்கள். அன்பு காட்டினார்கள் அல்லது கடுமை காட்டினார்கள். தொழிலாளர்களிடம் இருந்த தொழில்நுட்பத்தை மௌனிக்கச் செய்தார்கள். மன்னரும் ஊராரும் போற்றும் தொழில் நுட்பவியலாளர்களாக வலம் வந்தவர்கள், பிழைக்க வழியின்றி இடம்பெயர்ந்துவிட்டார்கள். தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்டார்கள். ‘நாங்கள் அந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் இல்லை’ என்று சொல்லிக்கொண்டார்கள். இந்த மண்ணுக்கான அடையாளத் தொழில்நுட்பங்களும் அவர்களுடன் மறைந்தன.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் உப்பிளியப்பட்டி என்ற ஊர் இருக்கிறது. உப்பிளியர்கள் வாழ்ந்த ஊர். தான் வாழுகின்ற நிலத்தின் மண்ணை எடுத்து உப்புக் காய்ச்சும் தொழில்நுட்பம் உப்பிளிய மக்களிடம் இருந்துள்ளது. அதே மண்ணில் இருந்து வெடி உப்பு எனப்படும் வெடிமருந்து உற்பத்தி செய்யும் தொழில்நுட்பமும் அவர்களிடம் இருந்துள்ளது. அந்த மக்களின் வாரிசுகள் இப்போதும் இருக்கிறார்கள். தங்கள் மூதாதையர்கள் அடைந்த கொடுமைகளும் சொல்லொண்ணாத் துயரங்களும் அவர்களின் மரபணுவில் புதைந்து கிடக்கிறது. இவர்களுமே ‘நாங்கள் அந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் இல்லை’ என்று சொல்லிக்கொள்ளும் அளவில்தான் இருக்கிறார்கள். யாரெல்லாம் நுட்பமான அறிவைக் கொண்டிருந்தார்களோ,கொண்டிருக்கிறார்களோ அவர்களையெல்லாம் குற்றவாளிகளாகப் பார்ப்பது என்பது அதிகார மையங்களின் வழமையான ஒன்றாகவே இருக்கிறது.

1947-ல் நாடு சுதந்திரம் அடைந்துவிட்டது. அந்நிய காலனிய சக்திகளை எதிர்த்துப்போராடி, ரத்தம் சிந்திய பூர்வகுடி மக்கள் தங்களின் மீதான களங்கத்தைத் துடைப்பதற்கு ஐந்து ஆண்டு காலம் காத்திருந்தனர். 1952-ஆம் ஆண்டுதான் குற்றப் பழங்குடிகள் சட்டம் நீக்கம் செய்யப்பட்டது. குற்றப் பழங்குடிகள் என வரையறுக்கப்பட்டு சித்திரவதைகளுக்குள்ளான இனக் குழுக்களில் போதிய அரசியல் பிரதிநிதிகள் இல்லாமல்போனதால், அந்த மக்களுக்கான நியாயம் காத்திருப்பிலேயே இருக்கிறது. துன்பங்களும் இழப்புகளும் காலத்தால் மறையலாம். ஒட்டுமொத்தமாக பூர்வகுடி இனக்குழுக்களின் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளால் அவர்கள் இழந்த சுயமரியாதையை எதன் பொருட்டும் நிவர்த்தி செய்ய முடியாது. அது அந்த மக்களுக்குத் தீரா இடும்பைத் தந்துகொண்டே இருக்கிறது.

நீண்ட மௌனத்திற்குப் பிறகு, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட பிகு ராம்ஜி இடேட் ஆணையம் (Bhiku Ramji Idate Commission) 2018-ஆம் ஆண்டு தனது அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. குற்றப்பரம்பரை என்ற அடையாளத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட சீர்மரபு பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக, ‘சீர்மரபு பழங்குடிகளுக்கான நிரந்தர ஆணையம் அமைக்க வேண்டும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கும் சீர்மரபு பழங்குடிகளை அவர்களுக்கான பட்டியலில் இணைக்க வேண்டும், சீர்மரபு பழங்குடிகளின் மேம்பாட்டிற்கு நிதி வழங்கும் கழகத்தை உருவாக்க வேண்டும், சட்டப் பாதுகாப்பிற்காக வன்கொடுமை சட்டத்தில் ஒரு பட்டியலை இணைக்க வேண்டும்’ என்ற பரிந்துரைகளை இடேட் ஆணையம் பரிந்துரைத்தது. அவை வெறும் பரிந்துரைகளாகவே இருக்கின்றன.

குற்றப்பழங்குடிகள் சட்டம் 75 ஆண்டுகள் அந்நியர்கள் ஆட்சியிலும், 5 ஆண்டுகள் சுதந்திர இந்தியாவிலும் நடைமுறையில் இருந்தது. சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் கடந்துவிட்டது. லட்சக்கணக்கான மக்கள் அதன் பாதிப்புகளில் இருந்து இன்றும் மீளவே இல்லை. அவை உருவாக்கிய இழப்புகளும் அவமானங்களும்; மரபு வழியாகவும் அடுத்த அடுத்த தலைமுறையினரை அச்சுறுத்துகிறது. குற்றப் பரம்பரை சட்டத்தின் பிடியில் இருந்த குற்றப்பழங்குடிகள்தான் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களை எதிர்த்துப் போரிட்ட முதல் இந்திய சுதந்திரப் போராட்டக்காரர்கள். இதை இந்திய அரசாங்கம் இன்று வரை அங்கீகரிக்கவில்லை. இந்த அங்கீகாரம் கிடைக்கும் வரை குற்றம்சாட்டப்பட்ட பழங்குடி மக்களுக்கான நீதி என்பது மறுக்கப்பட்ட ஒன்றாகவே வரலாற்றில் பதிவாகும்.

நீதிக்கான குரல் ஒலிக்கும்...

நியாயத்திற்கான பயணம் தொடரும்...

கட்டுரையாளர் : வழக்குரைஞர், சமூக செயற்பாட்டாளர்.

Mail: advocatetamilmani@gmail.com

summary

Regarding the fact that indigenous tribal groups who fought against British rulers were the first freedom fighters...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments