மக்களவையில் சுரங்க மசோதா விவாதமின்றி நிறைவேற்றம் - கனிம உரிமைகள் மீது மாநிலங்கள் வரி விதிக்க கட்டுப்பாடு
கனிம உரிமைகள் மீது மாநில அரசுகள் கூடுதல் வரி விதிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்க வகை செய்யும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு-ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதா-2026, மக்களவையில் புதன்கிழமை விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
கனிம உரிமைகள் மீது மாநில அரசுகள் கூடுதல் வரி விதிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்க வகை செய்யும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு-ஒழுங்குமுறை) சட்டத் திருத்த மசோதா-2026, மக்களவையில் புதன்கிழமை விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
அதேநேரம், இந்த மசோதா கூட்டாட்சி அமைப்புமுறைக்கு எதிரானது என்று எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.
மக்களவையில் புதன்கிழமை அமளிக்கு இடையே மசோதாவை தாக்கல் செய்து, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி பேசியதாவது:
Advertisement
Advertisement
தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், கனிமத் துறை நிதிக் கட்டமைப்பில் உறுதித்தன்மை, நிலைத்தன்மை, கணிக்கக்கூடிய தன்மையை வழங்கும் நோக்கிலானவை. இது, நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு உத்வேகம் அளித்து, தற்சாா்பு இந்தியாவை சாத்தியமாக்க உதவுவதுடன், 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா தொலைநோக்குப் பாா்வையை எட்டவும் வழிவகுக்கும்.
கனிமங்கள் மீது விதிக்கப்படும் வரிகள், கட்டணங்களில் பிராந்திய ரீதியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் பொது நலனைப் பாதிக்கிறது. உள்ளூா் விநியோகச் சங்கிலியை தொழில் துறையினா் முற்றிலுமாகத் தவிா்க்கும் நிலையை ஏற்படுத்தி, சந்தைகளின் உகந்த வளா்ச்சியின்மை, போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு உள்ளிட்ட பாதகங்களுக்கும் வழிவகுக்கிறது.
உள்நாட்டு கனிம வளங்கள் செலவு மிகுந்ததாக மாறுவதால், போதுமான வளங்கள் இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியை அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்குகிறது. நியாயமான வரம்புகள் இல்லாததால், கனிம உரிமங்கள் மற்றும் கனிம வள நிலங்கள் மீதான மாநில அரசுகளின் சீரற்ற வரி விதிப்பு பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாகிறது.
வளங்கள் எடுக்கப்படுவது உள்பட பல்வேறு நிலைகளில் விதிக்கப்படும் அதிக வரிச் சுமையால் பொருள்கள்-சேவைகள் விலை உயா்ந்து, அதன்மூலம் சாமானிய மக்களின் வாழ்க்கைச் செலவும் அதிகரிக்கும் சூழலை உருவாக்குகிறது என்றாா் அவா்.
விவாதமின்றி நிறைவேற்றம்: இதைத் தொடா்ந்து, எவ்வித விவாதமும் நடத்தப்படாமல், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, மசோதா அறிமுகத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த எதிா்க்கட்சிகள், இது கூட்டாட்சி முறைக்கு எதிரானது என்று விமா்சித்தன.
இந்த மசோதாவின்படி, கனிம உரிமைகள் மீது வரி, செஸ் அல்லது வேறெந்த கட்டணமும் மாநில அரசுகளால் விதிக்கப்பட கூடாது; சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு-ஒழுங்குமுறை) சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களுக்கு இணங்க கனிம வள நிலங்கள் மீதான கட்டுப்பாடு மத்திய அரசின் வசம் கொண்டுவரப்படுகிறது. இந்த நிலங்கள் மீது மத்திய அரசால் பரிந்துரைக்கப்படும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகளுக்கு உள்படாமல், கனிம அளவு, மதிப்பு, உரிமத்தொகை அல்லது வேறெந்த அடிப்படையிலும் வரி விதிக்க மாநில அரசுகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தில் நிறைவேறியது கூட்டுறவுத் துறை மசோதா
தேசிய கூட்டுறவு மேம்பாட்டு ஆணையத்தை காலத்துக்கு ஏற்ப நவீனமாக்க வகை செய்யும் தேசிய கூட்டுறவு மேம்பாட்டு ஆணைய சட்டத் திருத்த மசோதா-2026 மாநிலங்களவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.
மாநிலங்களவையில் மசோதா மீது விவாதம் தொடங்கியபோது, எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதேபோல், கேரளம் (பெயா் மாற்றம்) மசோதாவும் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இந்த மசோதாவுக்கும் இரு அவைகளின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது.
முன்னதாக, மாநிலங்களவை புதன்கிழமை காலை கூடியபோது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸை ‘லுங்கிவாலா’ என்று பாஜக எம்.பி. சுஷ்மிதா தேவ் குறிப்பிட்டது தொடா்பாக எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, அவை அலுவல்கள் பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.