சுதந்திர நாள்! தொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!
தொடர்ந்து 2 ஆவது ஆண்டாக செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர நாள் விழாவை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்...
தில்லியில், தொடர்ந்து 2 ஆம் ஆண்டாக செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர நாள் விழாவை காங்கிரஸ் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே புறக்கணித்துள்ளனர்.
நாட்டின் 80 ஆவது சுதந்திர நாள் விழா இன்று (ஆக. 15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தில்லியின் செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
செங்கோட்டையில் கொண்டாடப்படும் நாட்டின் முக்கியமான தேசியத் திருநாள்களில் ஒன்றான சுதந்திர நாள் விழாவில், காங்கிரஸ் தேசியத் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்காமல் தொடர்ந்து 2 ஆவது ஆண்டாகப் புறக்கணித்துள்ளனர்.
Advertisement
Advertisement
ஏற்கெனவே, மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் வார்த்தை மோதல்கள் வெடித்து உறவுகளில் விரிசல் விழுந்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களின் இந்தப் புறக்கணிப்பு பெரும் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமர்வதற்கு இறுதி வரிசைகளில் இடம் ஒதுக்கப்பட்டது. மத்திய அமைச்சருக்கு நிகரான பதவி வகிக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசின் நிகழ்ச்சிகளில் முன் வரிசையில் இடம் ஒதுக்கப்படும் மரபுக்கு முரணான அந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
முன்னதாக, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பல்வேறு விவாகரங்களில் மத்திய அரசுக்கு எதிராகக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வந்ததால், மாநிலங்களவை மற்றும் மக்களவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Rahul Gandhi and Kharge have boycotted the Independence Day celebrations held at the Red Fort in Delhi for the second consecutive year.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.