கேரளத்தில் புதிய போட்டி! எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு இடதுசாரிகள் இடையே மோதல்!
கேரள சட்டப்பேரவை துணை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சிபிஐ மற்றும் சிபிஎம் இடையே மோதல்...
கேரளத்தின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவி குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) இடையே மோதல் வெடித்துள்ளது.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, சிபிஎம் தலைமையிலான இடதுசாரிகள் எதிர்க்கட்சியில் இடம்பெற்றுள்ளனர்.
இதையடுத்து, சிபிஎம் மூத்த உறுப்பினரும், முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் கேரள சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்து வருகிறார்.
Advertisement
Advertisement
இதில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியைத் தங்களுக்கு வழங்குமாறு சிபிஎம் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஐ உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு, சிபிஎம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்படும் நிலையில், இருதரப்பினரும் பொதுவெளியில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 2 லட்சத்துக்கு அதிகமான வாக்குகள் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் 5,000 வாக்குகளையாவது பெற முடியும்? என சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் சிஎன் மோஹனன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“இடதுசாரி அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுவெளியில் தொடர்ந்து விமர்சித்து வந்தது. 2026 தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி தோல்வியடைந்ததற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.” எனக் கூறியுள்ளார்.
இத்துடன், சிபிஎம் ஆதரவின்றி சிபிஐ-யால் 5,000 வாக்குகளைக் கூட பெற முடியாது எனக் கூறிய அவர், கடந்த 1979 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி, அப்போது புதியதாக உருவாக்கப்பட்ட இடதுசாரிக் கூட்டணியில் இணைவதற்கு சிபிஐ ஓராண்டு காலம் எடுத்துக்கொண்டது எனவும் விமர்சித்துள்ளார். இவ்வாறு, இருதரப்பும் பொதுவெளியில் கருத்து மோதல்களில் ஈடுபடுவது பேசுபொருளாகியுள்ளது.
முன்னதாக, தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றும் முதல்வர் பதவிக்கு மூத்த தலைவர்கள் வி.டி. சதீசன், ரமேஷ் சென்னிதலா மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. பின்னர், சுமார் 10 நாள்கள் கழித்து கேரளத்தின் புதிய முதல்வராக வி.டி. சதீசன் பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.
A conflict has erupted between the CPI and CPI (M) over the post of Deputy Leader of the Opposition in the Kerala Legislative Assembly.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.