இன்றும்கூட தலித்துகளுக்கு பேப்பர் கப், மற்றவர்களுக்கு கண்ணாடி கிளாஸ்! ஏன்?
உத்தரகண்டில் கார்கே அவமதிக்கப்பட்ட சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தியது குறித்து...
உத்தரகண்டில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதாகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
தில்லியில் இன்று (ஆக. 29) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி பேசியதாவது, உத்தரகண்டில் கார்கே பிரசாரம் நடத்திய இடத்தைத் தூய்மைப்படுத்துதல் என்ற பெயரில், அவருக்கு எதிராக தீண்டாமை நடவடிக்கையைச் செய்துள்ளனர். இந்திய அரசியலமைப்பின்கீழ் தீண்டாமை என்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
கார்கேவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே நாங்கள் கோருகிறோம். கார்கேவுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
Advertisement
Advertisement
தான் அனைத்து சாதியையும் சார்ந்தவர் என பிரதமர் மோடி கூறிக் கொள்கிறார். ஆனால், அவருடைய கட்சிக்காரர் (உத்தரகாண்ட் பாஜக தலைவர் மகேந்திர பட்) தீண்டாமையை ஆதரிக்கிறார்.
நாட்டிலுள்ள ஒவ்வொரு பட்டியலினத்தவரும் பிறந்தது முதல் இறப்பு வரையில் எல்லா இடங்களிலும் ஏதோவொரு நிலையில் அவமானத்தை எதிர்கொள்கின்றனர். அவர்களின் குரல் ஒலிக்கும்போது, அவர்கள் மீது கடுமையான தாக்குதலும் நடத்தப்படுகிறது. இது அரசியலமைப்பின்படி சட்ட விரோதமானது.
இன்றும் பள்ளிகளில் இருக்கும் கழிப்பறைகளை பட்டியலினத்தைச் சேர்ந்த குழந்தைகள் சுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதுதான் நாட்டின் யதார்த்தம்.
கிராமங்களின் கிணறுகளில் பட்டியலினத்தவர்கள் தண்ணீர் எடுக்கவோ குடிக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் கிராமத்தின் பொதுவான கிணற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றளவிலும் தேநீர்க் கடைகளில் இரண்டு வகையான கோப்பைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று மீண்டும் பயன்படுத்தக் கூடிய கண்ணாடி டம்ளர்கள்; மற்றொன்று ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பேப்பர் அல்லது பிளாஸ்டிக் கோப்பைகள். பட்டியலினத்தவர்களுக்கு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கோப்பைகளும், மற்றவர்களுக்கு கண்ணாடி கோப்பைகளும் வழங்கப்படுகின்றன.
பட்டியலினத்தவர்கள், தங்களின் இல்ல திருமண ஊர்வலங்களில் கற்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தலைக்கவசம் பயன்படுத்த வேண்டியிருக்கிறது.
கார்கேவுக்கு எதிராக இழைக்கப்பட்ட தீண்டாமை குற்றத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதி வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், எவ்வாறு நீதியைப் பெறுவது என்பது காங்கிரஸுக்கு நன்றாகவே தெரியும்.
கார்கே போன்றோருக்கே இதுபோன்று நடக்கும்போது, பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் என்ன செய்ய முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள் என்று தெரிவித்தார்.
உத்தரகண்ட் மாநிலம் ஹா்த்வானியில் ஆக. 8-ல் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையை ஹோமம் நடத்தி சுத்திகரிப்பு செய்ததாக, பாஜகவினா் மீது தீண்டாமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவையில் காா்கே வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், கார்கே பொதுக்குட்டம் நடத்திய இடத்தை சுத்திகரிப்பு செய்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
Rahul Gandhi demands FIR over ‘purification ritual’ at Kharge rally venue
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.