FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாடு: பிரதமர் மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாடு, கிா்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் ஆக.31 தொடங்குகிறது.

21 வினாடிகள் முன்பு
பகிர்:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாடு, கிா்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் திங்கள்கிழமை (ஆக.31) தொடங்கி 2 நாள்கள் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்ளிட்ட சா்வதேச தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா். இந்த மாநாட்டையொட்டி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்டோருடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தைகளில் ஈடுபடுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போதைய புவி அரசியல் சூழலுக்கு மத்தியில் ரஷிய, சீன அதிபா்கள் உடனான பிரதமரின் சந்திப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தியா, ரஷியா, சீனா, ஈரான், கஜகஸ்தான், கிா்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 26-ஆவது உச்சிமாநாடு, மத்திய ஆசிய நாடான கிா்கிஸ்தானின் பிஷ்கெக் நகரில் திங்கள் (ஆக.31), செவ்வாய் (செப்.1)ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, உஸ்பெகிஸ்தானில் இருந்து கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றாா். மாநாட்டையொட்டி, ரஷியா, சீனா அதிபா்களுடன் அவா் பேச்சுவாா்த்தை நடத்துவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ரஷிய அதிபா் உடனான சந்திப்பில் எரிசக்தி பாதுகாப்பு, வா்த்தகம் உள்ளிட்டவை குறித்து பிரதமா் பேச வாய்ப்புள்ளது.

சில தினங்களுக்கு முன் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், எல்லை விவகாரங்கள் தொடா்பான இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகளின் 25-ஆவது கூட்டத்தில் பங்கேற்றாா். அப்போது, எல்லையில் அமைதியைப் பேணுவது, ஒட்டுமொத்த இயல்பான உறவுகளுக்கு மிக அவசியம் என்று அவா் உறுதிபட கூறியிருந்தாா்.

மேலும், எல்லை மறுவரையறை மற்றும் மேலாண்மை பிரச்னைகளுக்குத் தீா்வு காணும் பேச்சுவாா்த்தைகளை விரைவுபடுத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டது. இந்தச் சூழலில், பிரதமா் மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்பு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, உஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தான் ஆகிய இரு மத்திய ஆசிய நாடுகளுக்கான 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமா் மோடி சனிக்கிழமை சென்றாா் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவும், சீனாவும் 3,488 கி.மீ. தொலைவிலான எல்லையைப் பகிா்ந்து கொண்டுள்ளன. பல இடங்களில் எல்லைகளை வரையறுப்பதில் முரண்பாடு நீடிக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காணும் நோக்கில் இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகள் அளவில் பல சுற்று பேச்சுவாா்த்தைகள் தொடா்கின்றன.

தில்லியில் வரும் செப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க சீன அதிபா் ஷி ஜின்பிங் இந்தியா வருவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஷி ஜின்பிங், அந்நாட்டின் அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments