அமெரிக்க வரிக் குறைப்பால் நாட்டில் எந்தெந்தத் துறைகளுக்கு பலன்?
வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததால், நாட்டில் ஏராளமான துறைகள் பலன் பெறும் என பியூஷ் கோயல் கருத்து..
இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததால், நாட்டில் ஏராளமான துறைகள் பலன் பெறும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு (பிப்.2) ஒப்புதல் தெரிவித்தார். இதன்படி, இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த அதிகப்படியான வரி, 18 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது.
மேலும், எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்த இந்தியா முடிவுசெய்துள்ளது.
Advertisement
Advertisement
அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிடம், பிரதமர் நரேந்திர மோடி சரண் அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சி விமர்சித்துள்ளது.
இதனிடையே அமெரிக்கா உடனான வணிக ஒப்பந்தத்தால், நாட்டின் பல்வேறு துறைகள் பலன் பெறும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பியூஷ் கோயல் பேசியதாவது:
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தால் நாட்டின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி அடையும். நமது பொறியியல் துறை, குறிப்பாக பொறியியலில் உள்ள அனைத்துப் பிரிவுகளும் பலன் அடையும். அதாவது, வாகன உதிரி பாக உற்பத்தி, மின்னணுப் பொருள்கள் உற்பத்தி மற்றும் பொறியியல் சார்ந்த கனரக பொருள்களை அமெரிக்காவின் பரந்த சந்தைக்கு கொண்டுசெல்ல முடியும்.
நமது ஜவுளி துறை, வைரம் மற்றும் ரத்திரக் கற்கள், தோல் பொருள்கள் ஏற்றுமதி, கப்பல் துறை சார்ந்த பொருள்கள் என பல்வேறு வாய்ப்புகள் அமெரிக்கா உடனான ஒப்பந்தத்தில் உருவாகியுள்ளன.
இந்திய பொருளாதாரத்தின் மிகவும் நுணுக்கமான துறையான பால்வளம் மற்றும் விவசாயத் துறைகள் இந்த ஒப்பந்தத்தால் பாதுகாக்கப்பட்டுள்ளன. இந்தத் துறைகளில் உள்ளவர்கள் பலன் அடையும் வகையில் பிரதமர் மோடி இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார். உலகின் உற்பத்தி மையமாக மாற இது உதவும். நாட்டு மக்கள் அனைவரும் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.
தவறாக வழிநடத்தும் ராகுல்
ராகுல் காந்தியைப் போன்ற எதிர்மறை எண்ணம் உடைய தலைவர்கள் நாட்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவோ அல்லது தவறாக வழிநடத்த முயற்சிப்பதோ துரதிருஷ்டமானது. ராகுல் காந்தியின் பொய்களுக்கும் வஞ்சனைகளுக்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். ஆனால், அது நடக்காது. நாடு முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக நாட்டை மாற்றுவதில் காங்கிரஸுக்கு ஆர்வம் இல்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தையே காங்கிரஸ் சீரழித்தது. வளர்ச்சி தடைப்பட்டது எனக் குறிப்பிட்டார்.
Minister of Commerce Piyush Goyal says on India-US trade agreement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.