ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!
அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா' திட்டம் என்ன ஆனது? என பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளதைப் பற்றி...
ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தம், அமெரிக்காவுடன் ஒப்பந்தம் உள்ளிட்ட அறிவிப்புகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள நிலையில், ‘மேக் இன் இந்தியா’ (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டம் என்ன ஆனது? என பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று இரவு (பிப்.2) ஒப்புதல் தெரிவித்தார். மேலும், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியுடனான நட்பு மற்றும் மரியாதை காரணமாகவும், அவர் கேட்டுக் கொண்டதன்பேரிலும் அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டு, இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்படுவதாக தெரிவித்தார். எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்த இந்தியா முடிவுசெய்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அமெரிக்காவின் ஒப்பந்தத்துக்கு பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் கட்சி பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்தப் பதிவில், “போர் நிறுத்தத்தைப் போலவே, இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் வெளியிட்டுள்ளார். இந்த வர்த்தக ஒப்பந்தம் 'மோடியின் கோரிக்கையின் பேரிலேயே' செய்யப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு எதிரான வரியை இந்தியா 'பூஜ்ஜியமாகக்' குறைக்கும் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். அமெரிக்காவிற்காக நமது சந்தையை முழுமையாகத் திறக்க இந்தியா ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இது இந்திய வியாபாரிகளையும், விவசாயிகளையும் கடுமையாகப் பாதிக்கும்.
டிரம்ப்பின் பதிவில் அமெரிக்காவிற்காக விவசாயத்துறையை பயன்படுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் என்ன? நமது விவசாயிகளின் பாதுகாப்பும் நலன்களும் எவ்வாறு அதில் உறுதி செய்யப்பட்டுள்ளன?
மோடி அரசு ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்காமல், அதற்குப் பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவிடமிருந்து வாங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைக்கு மோடி அரசு ஒப்புக்கொண்டதா?
அமெரிக்காவிடமிருந்து அதிகப் பொருள்களை இந்தியா இறக்குமதி செய்வது குறித்தும் பேசப்படுகிறது. அப்படியானால், 'மேக் இன் இந்தியா' திட்டம் என்ன ஆனது?
இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களைத் தெரிந்துகொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு.
இந்த விவரங்களை மோடி அரசு நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
talk of buying more goods from America. If that's the case, then what happened to 'Make in India'? Congress questions!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.