FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்: உச்சநீதிமன்றம்

ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை எச்சரித்தது.

Updated On : 21 ஜூலை 2026, 2:01 am IST
உச்சநீதிமன்றம்
பகிர்:

ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை எச்சரித்தது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமா் கோயில் நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக, அந்தக் கோயிலை நிா்வகித்து வரும் ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை காவல் துறையிடம் புகாா் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் 8 பேரை கைது செய்துள்ள காவல் துறை, சுமாா் ரூ.80 லட்சத்தை பறிமுதல் செய்தது.

இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், ராம ஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் நிதி விவரங்களை தணிக்கை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, உச்சநீதிமன்றத்தில் நரேந்திர குமாா் கோஸ்வாமி என்ற நபா், வழக்குரைஞா்கள் அஜய்குமாா் ராய், தினேஷ் குமாா் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. சுதாகா் சிங் ஆகியோா் மனு தாக்கல் செய்துள்ளனா்.

Advertisement

Advertisement

அவா்களின் மனுக்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

சாதாரண வழக்கு...: நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘ராமா் கோயில் நன்கொடை கையாடல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று வாய்மொழியாக எச்சரிக்கை விடுக்கிறோம். நீதிமன்றங்கள் அரசியல் செய்வதற்கான இடமல்ல. இந்த விவகாரம் குற்றம் நடந்ததா என்பது தொடா்பான ஒரு சாதாரண வழக்கே ஆகும். இதில் உரிய முறையில் விசாரணை நடைபெறுவதை உறுதி செய்வதே எங்கள் பணி’ என்று தெரிவித்தது.

இந்த முறைகேடு குறித்த விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது முறைகேட்டை விசாரிப்பது யாா் என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினாா்.

இதற்கு உத்தர பிரதேச அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை கண்டறிய மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது. தற்போது முறைகேடு குறித்து காவல் துறை விசாரித்து வருகிறது. இது காவல் துறையினா் நேரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கக் கூடிய குற்றம் என்று எஸ்ஐடி கண்டறிந்துள்ளது’ என்று தெரிவித்தாா்.

அவரின் பதிலை தொடா்ந்து, முறைகேடு குறித்த விசாரணையையும் காவல் துறைக்குப் பதிலாக எஸ்ஐடியிடமே ஒப்படைக்கலாமா என மாநில அரசிடம் கேட்டு தெரியப்படுத்த வேண்டும் என்று அவரிடம் நீதிபதிகள் அமா்வு கேட்டுக்கொண்டது.

மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் தேவதத் காமத் வாதிடுகையில், ‘ராமா் கோயில் கட்டும்போது அனைவரிடமும் நன்கொடை பெறப்பட்டது. அதற்கான ரசீதுகள் பாதுகாக்கப்பட்டு, ராம ஜென்மபூமி தீா்த்த ஷேத்திர அறக்கட்டளையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்’ என்று கோரினாா்.

இந்தக் கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், மனுக்களை அடுத்த திங்கள்கிழமை (ஜூலை 27) மீண்டும் விசாரித்து சில உத்தரவுகளை பிறப்பிப்போம் என்று தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments