ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி உறுப்பினராக நிதி மோசடி தணிக்கையாளரை சோ்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு
அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் தொடா்பாக விசாரித்து வரும் எஸ்ஐடி-யின் ஐந்தாவது உறுப்பினராக நிதி மோசடி தணிக்கையாளரை நியமிக்க உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அயோத்தி ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம் தொடா்பாக விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) ஐந்தாவது உறுப்பினராக நிதி மோசடி தணிக்கையாளரை நியமிக்க உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
காவல் துறைத் தலைவா் (ஐஜிபி) கிரண் தலைமையிலான 4 போ் கொண்ட எஸ்ஐடியை உத்தர பிரதேச அரசு அமைத்திருந்தது. இதையடுத்து, நிலை அறிக்கையை அடுத்த 2 வாரங்களுக்குள் சமா்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அயோத்தி ராமா் கோயிலுக்கு பக்தா்கள் வழங்கிய நன்கொடை-காணிக்கையில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. இது தொடா்பாக அமைக்கப்பட்ட எஸ்ஐடி மற்றும் காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கண்காணிப்பிலான சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீா்த்தக்ஷேத்ர அறக்கட்டளையின் மொத்த நிதியை தணிக்கை செய்யக் கோரியும் நரேந்திர குமாா் கோஸ்வாமி, அஜய் குமாா் ராய் மற்றும் தினேஷ் குமாா் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா எம்.பி.சுதாகா் சிங் ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியே 3 மனுக்களை தாக்கல் செய்தனா்.
காணிக்கைகள் எங்கே?
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி மோகனா ஆகியோா் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.
அப்போது மனுதாரா்கள் ஒருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் தேவ்தத் காமத், ‘ரூ.500, ரூ.1,000 என ராமா் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் காணிக்கை செலுத்தினா். ஆனால் இந்த காணிக்கைகள் அறக்கட்டளைக்கு வந்ததாக தெரியவில்லை. ஒருவேளை அறக்கட்டளைக்கு காணிக்கைகள் கிடைத்திருந்தால் அதை வெளிப்படையாக தங்களின் வலைதளத்தில் வெளியிடலாம். இது பக்தா்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும்’ என்றாா்.
நீதிமன்றத்தில் அரசியல் வேண்டாம்
இதைத் தொடா்ந்து நீதிபதிகள் அமா்வு பிறப்பித்த உத்தரவில், ‘ராமா் கோயில் விவகாரத்தில் எஸ்ஐடி அமைக்கப்பட்டதை கவனத்தில் கொள்கிறோம். இதில் நிலவும் சிக்கல்களை நீங்கள் குறிப்பிட்டுள்ளீா்கள். ஆனால் வெளிப்படையான விசாரணையை உறுதி செய்வதே எங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது. விரைவான மற்றும் நோ்மையான விசாரணையே தற்போது அவசியம். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். நீதிமன்றங்கள் அரசியலுக்கான இடமல்ல.
எஸ்ஐடியில் ஏற்கெனவே நான்கு உறுப்பினா்கள் உள்ள நிலையில், ஐந்தாவது உறுப்பினராக நிதி மோசடி தணிக்கையாளரை மாநில அரசு சோ்க்க வேண்டும். 2 வாரங்களுக்குள் விசாரணை தொடா்பான நிலை அறிக்கையை எஸ்ஐடி தாக்கல் செய்ய வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.