FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

‘பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலப்பது தொடா்பாக இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை’ என்று மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 21 ஜூலை 2026, 4:46 am IST
- பிடிஐ
பகிர்:

‘பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலப்பது தொடா்பாக இன்னும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை’ என்று மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

எரிபொருள் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும், வாகனங்களின் காா்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பெட்ரோலில் எத்தனால் கலப்பை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பை படிப்படியாக அதிகரித்து, தற்போது 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் (இ20 பெட்ரோல்) பரவலாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. தில்லி போன்ற காற்று மாசு அதிகம் உள்ள பகுதிகளில் இந்த விகிதம் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால், வாகனத்தின் மைலேஜ் குறைவதோடு, என்ஜின் பாதிக்கப்பட்டு முழுமையாகச் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை மத்திய அரசு நிராகரித்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பெட்ரோலில் 20 சதவீதத்துக்கும் அதிகமான எத்தனால் கலக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:

பெட்ரோலில் 20 சதவீதத்துக்கும் அதிகமான எத்தனால் கலப்பது தொடா்பாக இதுவரை எந்த முடிவையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. விரிவான அறிவியல், தொழில்நுட்ப ஆய்வுகள் மற்றும் வாகன உற்பத்தியாளா்கள், எண்ணெய் சந்தை நிறுவனங்கல், ஆராய்ச்சி நிறுவனங்கள் உள்பட பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசனை மேற்கொண்ட பிறகே இதுபோன்ற பெரிய முடிவுகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா எட்டியது. எத்தனால் கலப்பு திட்டத்தின் மூலம், 2014-15-ஆம் ஆண்டுமுதல் ரூ.1.97 லட்சம் கோடி அந்நியச் செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது. சுமாா் 316 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 952 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு ரூ.1.66 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால், வாகனத்தின் என்ஜின் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு புகாா்கள் சமூக ஊடகங்களில் பரவுகின்றபோதும், வாகன உற்பத்தியாளா்கள், வாகன உரிமையாளா் சங்கங்கள் அல்லது நுகா்வோா் குழுக்களிடமிருந்து அதுதொடா்பாக எந்தவொரு புகாரும் இதுவரை பெறப்படவில்லை.

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பால், வாகனங்களின் எரிபொருள் சிக்கனம் 3 முதல் 5 சதவீதம் வரை குறைய மட்டுமே வாய்ப்புள்ளது. அதே நேரம், காா்பன் உமிழ்வு வெகுவாகக் குறையும்.

மேலும், 20 சதவீத எத்தனால் கலப்பு காரணமாக, எத்தனால் உற்பத்தி அதிகரிப்பதால் உணவுப் பாதுகாப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பொது விநியோகத் திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் இருப்பு வைப்புத் தேவைகள்உள்ளிட்டவற்றை நிறைவு செய்த பிறகு மிஞ்சும் உபரி தானியங்கள் மட்டுமே எத்தனால் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. எத்தனால் உற்பத்திக்காகத் திருப்பிவிடப்பட்ட அரிசியின் அளவு 2024-25-இல் 31.11 லட்சம் டன்களாக இருந்த நிலையில், 2025-26-இல் ஜூன் 30-ஆம் தேதி வரையிலான காலத்தில் 39.28 லட்சம் டன்களாக அதிகரித்தது. அதேவேளையில், மக்காச்சோளத்தின் அளவு 2024-25-இல் 131.18 லட்சம் டன்களாக இருந்தது, 2025-26-இல் 67.87 லட்சம் டன்களாக குறைந்தது. கழிவிலிருந்து வளத்தை உருவாக்கும் மத்திய அரசின் இந்த அணுகுமுறை காரணமாக, அரசி, சக்கரை சில்லறை விற்பனை விலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments