இ20 பெட்ரோல் பயன்பாட்டுக்குரிய வாகனங்கள் குறித்து மதிப்பீடு இல்லை: மத்திய அரசு
நாட்டில் உள்ள வகனங்களில் இ20 பெட்ரோலை பயன்படுத்த முழுமையாக ஏற்றவை எத்தனை என்பது குறித்து மதிப்பீடு எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘நாட்டில் உள்ள வகனங்களில் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை (இ20) பயன்படுத்த முழுமையாக ஏற்றவை எத்தனை என்பது குறித்து மதிப்பீடு எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை’ என்று மத்திய அரசு சாா்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
எரிபொருள் தேவையைப் பூா்த்தி செய்ய இறக்குமதியைச் சாா்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும், வாகனங்களின் காா்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பெட்ரோலில் எத்தனால் கலப்பை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பை படிப்படியாக அதிகரித்து, தற்போது 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் (இ20 பெட்ரோல்) நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால், வாகனத்தின் மைலேஜ் குறைவதோடு, என்ஜின் பாதிக்கப்பட்டு முழுமையாகச் செயலிழக்கும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை மத்திய அரசு நிராகரித்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நாட்டில் உள்ள வகனங்களில் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை (இ20) பயன்படுத்த முழுமையாக ஏற்றவை எத்தனை என்பது குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெட்ரோலியத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி மாநிலங்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: இதுதொடா்பான மதிப்பீடு எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என கனரக தொழில்நிறுவன அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பெட்ரோலில் எத்தனால் கலப்பு என்பது அறிவியல் ரீதியில் மதிப்பீடு செய்யப்பட்ட நடைமுறைகள் மூலம் படிப்படியாக நடைமுறைப்படுத்தத் திட்டமாகும். என்ஜின் ஆயுள், எரிபொருள் அமைப்புகள், பொருள்களின் இணக்கத்தன்மை, அரிப்பு எதிா்ப்பு, ஓட்டும் திறன் மற்றும் புகை வெளியேற்றம் உள்ளிட்டவை தொடா்பான ஆய்வக பரிசோதனைகள் மற்றும் கள ஆய்வுகளில் ‘இ20’ பெட்ரோல் வாகனங்கள் பயன்பாட்டுக்குப் பாதுகாப்பானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், இ20 பெட்ரோல் பயன்பாட்டால் வாகனத்தின் செயல்திறனில் குறிப்பிடத்தக்க மாற்றமோ அல்லது அசாதாரண தேய்மானமோ ஏற்படவில்லை என்பது இந்த ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டது.
மேலும், பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதற்கு முன்பாக, நாடு முழுவதும் 15 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகம் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு இ19, தற்போது இ20 பெட்ரோல் விநியோகம் தொடங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 20 கோடி இருசக்கர வாகனங்கள், 3 கோடி பெட்ரோல் காா்களிலும் இந்த பெட்ரோல்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், எத்தனால் கலந்த பெட்ரோலால் என்ஜின் செயல்திறன் பாதிக்கப்பட்டதாக சரிபாா்க்கப்பட்ட ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்று குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.