இந்தியாவில் டெங்கு தடுப்பூசிக்கு முதல்முறையாக அனுமதி!
டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறித்து...
இந்தியாவில் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான தடுப்பூசிக்கு முதல் முறையாக மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை இயக்குநரகம் (டிசிஜிஐ) சந்தைப்படுத்தல் அனுமதி வழங்கியுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த டகேடா (Takeda) மருந்து நிறுவனத்தின் QDENGA (TAK-003) என்ற டெங்கு தடுப்பூசிக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது, நாட்டின் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
டெங்கு காய்ச்சல் இந்தியாவில் ஆண்டுதோறும் பருவமழைக் காலங்களில் அதிகரித்து, ஆயிரக்கணக்கானோருக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு மற்றும் நோய் அறிகுறிகளுக்கான சிகிச்சை ஆகியவை மட்டுமே முக்கிய தடுப்பு வழிமுறைகளாக இருந்து வந்த நிலையில், தற்போது தடுப்பூசிக்கும் ஒப்புதல் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.
QDENGA என்பது உயிருடன் பலவீனப்படுத்தப்பட்ட (Live-attenuated), நான்கு வகை (Tetravalent) டெங்கு தடுப்பூசியாகும். டெங்கு வைரஸின் நான்கு முக்கிய செரோடைப்புகளுக்கும் (DENV-1, DENV-2, DENV-3, DENV-4) எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த தடுப்பூசி இரண்டு தவணைகளாக-முதல் டோஸ் செலுத்தப்பட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் செலுத்தும் வகையில் வழங்கப்படுகிறது. முந்தைய தலைமுறை டெங்கு தடுப்பூசிகளில் சிலவற்றைப் போல, தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பு டெங்கு பாதிப்பு இருந்ததா என்பதை உறுதிப்படுத்தும் ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இதில் இல்லை.
யாருக்கு செலுத்தலாம்?
QDENGA தடுப்பூசி 4 முதல் 60 வயது வரையிலானவர்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும், பாதிக்கப்படாதவர்களாக இருந்தாலும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம். இதனால், டெங்கு தொற்று வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பயனாளிகளைத் தேர்வு செய்ய வேண்டிய தேவை இல்லை.
செயல்திறன் எப்படி?
பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் நீண்டகால ஆய்வுகளின் அடிப்படையில், QDENGA தடுப்பூசி அறிகுறிகளுடன் கூடிய டெங்கு பாதிப்பை சுமார் 80 சதவீதம் வரை குறைக்கிறது. மேலும், கடுமையான டெங்கு பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலையை 84 முதல் 90 சதவீதம் வரை குறைக்கும் திறன் கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த தடுப்பூசியின் பாதுகாப்புத் திறன் குறைந்தது ஏழு ஆண்டுகள் வரை நீடிப்பதாக நீண்டகால ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
பக்கவிளைவுகள்
QDENGA தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு பொதுவாக லேசான அல்லது மிதமான பக்கவிளைவுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. ஊசி செலுத்திய இடத்தில் வலி அல்லது சிவத்தல், தலைவலி, தசை வலி, லேசான காய்ச்சல் போன்றவை சிலருக்கு ஏற்படலாம். இவை பெரும்பாலும் தற்காலிகமானவை என்றும், தானாகவே சரியாகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருக்கு இந்த தடுப்பூசி பொருந்தாது?
QDENGA என்பது உயிருடன் பலவீனப்படுத்தப்பட்ட தடுப்பூசி என்பதால், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ளக் கூடாது என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
உலக அளவில் பயன்பாடு
QDENGA தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் முன்தகுதி (Prequalification) வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், பிரேசில், இந்தோனேசியா, தாய்லாந்து, ஆர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 40}க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தடுப்பூசி ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது.
இந்தியாவில் தற்போது இந்த தடுப்பூசிக்கு டிசிஜிஐ வழங்கியுள்ள சந்தைப்படுத்தல் அனுமதி, டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது. இருப்பினும், தடுப்பூசி பயன்பாட்டுக்கான வழிகாட்டுதல்கள், விலை, அரசு தடுப்பூசி திட்டத்தில் இணைப்பது தொடர்பான முடிவுகள் உள்ளிட்டவை பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The Drugs Controller General of India (DCGI) has granted marketing authorization for a dengue vaccine for the first time in the country. This approval for QDENGA (TAK-003), a dengue vaccine developed by the Japanese pharmaceutical company Takeda, is considered a significant milestone in the nation's dengue prevention efforts.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.