வாங்சுக்குக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது பற்றி...
தில்லி சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக போராடி வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு ஆதரவாக தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் சோனம் வாங்சுக் ஈடுபட்டு வந்தார். அவரது உடல்நிலை பலவீனம் அடைந்ததால், அவரைக் கட்டாயப்படுத்தி சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தில்லி காவல் துறையினர் கடந்த சனிக்கிழமை அனுமதித்தனர்.
இதையடுத்து, சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் இருந்து வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட வலியுறுத்தி என்று அவரது மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை அவசர விவகாரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், சோனம் வாங்சுக்கின் உடல்நிலை குறித்து சிறப்பு மருத்துவ குழு பரிசோதித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கீதாஞ்சலியின் மனு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய, நீதிபதி தேஜஸ் காரியா அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு, தில்லி அரசு, எய்ம்ஸ் மருத்துவ நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளை பரிசீலித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு வருமாறு: அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 19 மற்றும் 21-இன் கீழ் சோனம் வாங்சுக்கை சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் இருந்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு அவரது விருப்பத்தின் பேரில் உடனடியாக மாற்ற வேண்டும்.
தனியார் மருத்துவமனையின் இயக்குநர், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் குழுவை அமைத்து வாங்சுக்கின் உடல்நிலையைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து, மருத்துவ நடைமுறைகளின்படி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு சோனம் வாங்சுக் ஒத்துழைக்க வேண்டும். கீதாஞ்சலி தனது கணவரை எப்போது வேண்டுமானாலும் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவார் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் அனுமதியைத் தொடர்ந்து, சோனம் வாங்சுக் சஃப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் இருந்து குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு அவசரஊர்தி மூலம் இரவு 7.28 மணியளவில் கொண்டு செல்லப்பட்டார்.
Sonam Wangchuk has been shifted from the government hospital to a private hospital.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.