என் மகனை ஆரத்தி எடுத்து வரவேற்பேன்: சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே தாய் பெருமிதம்!
சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கேயின் பெற்றோர் இளைஞர்கள் போராட்டம் வெற்றியடைந்தது பற்றிப் பேசியுள்ளனர்.
சிஜேபி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே தலைமையிலான இளைஞர்கள் போராட்டத்தால் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.
இதனைத் தொடர்ந்து, சிஜேபி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றுவதாக உத்தரவாதம் கொடுத்த நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில், தனது மகனை நினைத்துப் பெருமைப்படுவதாகவும், நீண்ட நாள்கள் கழித்து அவரைச் சந்திக்கப் போவதாகவும் அபிஜித் தீப்கேவின் தாயார் கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.
Advertisement
Advertisement
மகாராஷ்டிராவின் சத்ரபதி சாம்பாஜிநகர் நகரில் உள்ள அவரது வீட்டிலிருந்து செய்தியாளர்களிடம் பேசிய அபீஜித்தின் தாய் அனிதா தீப்கே, “அவனை சீக்கிரம் வீட்டிற்கு வருமாறுக் கூறியுள்ளேன். அவன் வரவில்லை என்றால், நாங்களே சென்று அவனை அழைத்து வருவோம். அவனை இறுக்கமாகக் கட்டிப்பிடித்து அவனுக்கு ஆரத்தி எடுக்கவேண்டும். கடைசியாக அவன் இங்கு வந்தபோது, 'நான் ஒன்றும் பெரிய விஐபி இல்லையே' எனக் கூறி என்னை ஆரத்தி எடுக்க அனுமதிக்கவில்லை” என்று கண்ணீரை அடக்கியபடி பேசினார்.
மேலும், "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவனது நேர்மை வென்றுள்ளது. இளைஞர்களின் ஆதரவு அவனுக்கு உதவியதால், இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்துள்ளான்.
நான் அவனை நினைத்து பல இரவுகள் தூக்கமில்லாமல் கவலையுடன் கழித்தேன். ஒவ்வொரு நாள் காலையிலும் ஏதேனும் அசம்பாவித காணொலிகளைப் பார்த்துவிடுவோமோ என்ற பயத்தில் செல்போனை பார்க்கவே அஞ்சினேன். அவன் பாதுகாப்பாக இருக்கிறானா என்பதைத் தெரிந்துகொள்ள உடனே அவனுடைய நண்பர்களுக்கு அழைப்பேன். அவனது நண்பர்களே எனக்கு எப்போது ஆறுதல் கூறுவார்கள்.
போராட்டம் தொடங்கியபோது கவலையாலும் வேதனையாலும் அழுதேன். இன்று என் கண்களில் வருவது மகிழ்ச்சியால் வரும் கண்ணீர். இந்தப் போராட்டத்திற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உழைத்துள்ளனர். அமைச்சர் பதவி விலகியது இளைஞர்களின் வெற்றி” என்று தெரிவித்தார்.
அபிஜீத்தின் தந்தை பகவான்ராவ் தீப்கே கூறுகையில், ”அவன் அரசியலில் இறங்கியபோது நாங்கள் அனைவரும் கவலைப்பட்டோம். என் விருப்பத்திற்கு மாறாகவே அவன் அதில் ஈடுபட்டான். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் எந்த அரசியல் பின்னணியும் இல்லை. அவன் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் நாங்கள் இருந்தோம். அதனால், ஜூன் மாதம் அமெரிக்காவில் இருந்து அவனைத் இந்தியா திரும்பவேண்டாம் என்று நாங்கள் தெரிவித்தோம்.
ஆரம்பத்தில் பயத்தால் வீட்டை விட்டு வெளியேறி கொங்கன் பகுதியில் தங்கியிருந்தோம். எங்கள் குடும்பமே கடும் அழுத்தத்தில் இருந்தோம். எங்களுக்கு உடல் ரீதியான தாக்குதல் அச்சுறுத்தல்களும் வந்தன. நாங்கள் மிகவும் பலவீனமடைந்து, எழுந்து நிற்கக்கூட முடியாத நிலையில் இருந்தோம். ஒரு நாளைக்கு ஒரு ரொட்டி மட்டுமே சாப்பிட்டோம். எங்களால் நிம்மதியாகச் சாப்பிடவோ தூங்கவோ முடியவில்லை.
போராட்டத்தின் போது அவன் இருமுறை தாக்கப்பட்டான். ஜூலை 20 அன்று அவனது ஒலிவாங்கியை ஒரு காவலர் பிடுங்கியதைப் பார்க்கையில் ’பார்டர்’ திரைப்படத்தின் காட்சி நினைவுக்கு வந்தது. காவல்துறையினரிடம் அவன் சிக்கிக் கொண்டால் உயிர் பிழைக்கமாட்டான் என்றும் தோன்றியது. கடவுளின் அருளால் இப்போது அவன் பாதுகாப்பாக இருக்கிறான். இப்போது வீட்டிற்கு வந்து அவன் எங்களுடன் இருக்கவேண்டும் என விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.
தர்மேந்திர பிரதான் பதவி விலகியது பற்றி பேசிய அவர், "இதை யாருடைய வெற்றியோ அல்லது தோல்வியோ என்று பார்க்கக்கூடாது. இவ்வளவு உயர்ந்த பதவியை விட்டுக்கொடுக்கப் பெரிய மனம் வேண்டும். பதவி விலகுகையில் கூட அவர் மாணவர்களின் நலனையே கருத்தில் கொண்டார்," என்று அவர் தெரிவித்தார்.
மேலும், “என் மகன் முன்பு அரவிந்த் கேஜரிவாலுடன் பணியாற்றி இருக்கிறான். மிக அருகில் அரசியலைப் பார்த்திருக்கிறான். எனக்குத் தனிப்பட்ட முறையில் அரசியல் பிடிக்காது. அவன் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்றும் எனக்குத் தெரியவில்லை" என்றார்.
Mother of CJP founder Abhijit Dipke expresses pride
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.