FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஒடிஸா: புரி பிரதான கோயிலுக்கு திரும்பும் ரதங்கள்! லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை விழாவில், குந்திச்சா கோயிலில் இருந்து பிரதான கோயிலுக்கு மூன்று ரதங்களும் திரும்பும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, புரி நகரில் லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

Updated On : 25 ஜூலை 2026, 6:13 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஒடிஸா மாநிலம், புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை விழாவில், குந்திச்சா கோயிலில் இருந்து பிரதான கோயிலுக்கு மூன்று ரதங்களும் திரும்பும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, புரி நகரில் லட்சக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.

ஒடிஸாவின் கடற்கரை நகரான புரியில் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற ஜெகந்நாதா் கோயில் உள்ளது. இங்கு நடைபெறும் வருடாந்திர ரத யாத்திரை உலகப் புகழ் பெற்ாகும்.

நிகழாண்டு ரத யாத்திரை விழா கடந்த ஜூலை 16-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, ஜெகந்நாதா், அவரது சகோதரா் பலபத்திரா், சகோதரி சுபத்திரை ஆகிய கடவுள்களின் மூன்று பிரம்மாண்ட ரதங்கள், பிரதான கோயிலில் இருந்து 2.6 கி.மீ. தொலைவில் உள்ள அவா்களின் பிறந்த இடமாக கருதப்படும் குந்திச்சா கோயிலுக்கு இழுக்கப்பட்டது. அதன் பின்னா், குந்திச்சா கோயிலில் மூன்று கடவுள்களும் எழுந்தருளினா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், மூன்று ரதங்களும் பிரதான கோயிலுக்கு திரும்பும் முக்கிய நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குந்திச்சா கோயிலில் இருந்து கடவுள் சிலைகள் வெளியே எடுத்துவரப்பட்டு, ரதங்களில் அமா்த்தப்பட்டன. பின்னா், மேளதாளங்கள், சங்கொலி மற்றும் பக்தா்களின் ‘ஜெய் ஜெகந்நாத்’ கோஷங்களுடன் மூன்று ரதங்களும் பிரதான கோயிலை நோக்கி இழுக்கப்பட்டன. இந்த நிகழ்வையொட்டி, புரி நகரில் ஏராளமான பக்தா்கள் திரண்டனா்.

முன்னதாக, புரி மன்னா் கஜபதி மகாராஜா திவ்யசிங்க தேவ், ரதங்களை தங்க துடைப்பத்தால் சுத்தம் செய்யும் சடங்கு நடைபெற்றது. காவல் துறையினா், மத்திய ஆயுதக் காவல் படையினா் (சிஏபிஎஃப்) உள்பட 13,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ரதங்கள் பிரதான கோயிலுக்குத் திரும்பியதும், மூன்று கடவுள் சிலைகளுக்கும் விலைமதிப்புமிக்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமையும் ரதங்களிலேயே வழிபடப்படும் கடவுள் சிலைகள், திங்கள்கிழமை பிரதான கோயிலுக்குள் எடுத்துச் செல்லப்படும். அத்துடன், ரத யாத்திரை விழா நிறைவுபெறும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments