தமிழகத்துக்கு காவிரி நீர்: கர்நாடகம் மேல்முறையீடு செய்யும்
காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு நீரை திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.
காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு நீரை திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து புதுதில்லியில் உள்ள கர்நாடக மாளிகையில் மாநில அரசு தலைமை வழக்குரைஞர், மூத்த வழக்குரைஞர்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியதாவது:
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவு குறித்து தலைமை வழக்குரைஞர், சட்ட நிபுணர்கள், மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.
Advertisement
Advertisement
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறோம்.
இந்த விவகாரத்தில் விரிவான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். காவிரி நதியில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக அரசு ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகளை காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு இருமுறை நிராகரித்துள்ளது. ஆனால், இம்முறை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் கையாள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து நீர்வளத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவாக விவாதித்திருக்கிறோம். பெங்களூருக்கு திரும்பியதும், இந்த விவகாரம் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
விஜய் வருகை: ஏற்பாடுகள் தயார்
தமிழக முதல்வர் விஜய் கர்நாடகம் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
தில்லியில், அவர் கூறுகையில், என்னைச் சந்திக்க தமிழக முதல்வர் விஜய் விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக என்னிடம் தொலைபேசியில் பேசினார். அவருக்கு உரிய மரியாதையை வெளிப்படுத்தியதோடு, சந்திப்புக்கு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
ஆகஸ்ட் 3 -ஆம் தேதி அவரது வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள நிலைமையை நேரில் ஆய்வு செய்யும்படி விஜய்யை கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதற்குத் தேவையான ஹெலிகாப்டர் போன்ற ஏற்பாடுகளையும் அரசு செய்யும் என்று தெரிவித்துள்ளோம். தமிழக முதல்வர் விஜய், களநிலவரத்தில் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்று பார்ப்போம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.