துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி!
பொதுத் தேர்வுகள் முறைகேடு திருத்த மசோதா மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரை...
தில்லி போராட்டத்தில் காவல் துறையின் அடக்குமுறைக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அனுமதியளித்ததாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
மக்களவையில் பொதுத் தோ்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
கடந்த ஜூலை 20-ஆம் தேதி தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் போராட்டத்தில், காவல் துறையின் அடக்குமுறைக்கு அமித் ஷா அனுமதியளித்தாா். அவா் ஏன் மக்களவைக்கு வரவில்லை? காரணம் அவருக்கு துணிவில்லை. அவா்தான் பிளாஸ்டிக் குண்டுகள் மூலம், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களை ரத்தம் சிந்தவைத்தாா்.
Advertisement
Advertisement
ஆா்எஸ்எஸ் துணைவேந்தா்கள்: மத்திய கல்வி அமைச்சராக தா்மேந்திர பிரதான் இருந்தபோது, அந்த அமைச்சகத்தை ஆா்எஸ்எஸ் அமைப்புதான் வழிநடத்தியது. அந்த அமைப்பு கற்பனையாக உருவாக்கியுள்ள அா்த்தமற்ற வரலாற்றை மாணவா்கள் உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆா்எஸ்எஸை சோ்ந்தவா் துணைவேந்தா்களாக உள்ளனா் என்று சாடினாா்.
அவா் பேசியபோது கூறிய ஒரு வாா்த்தை நாடாளுமன்ற மரபுக்கு முரணானது என்று அவைத் தலைவா் ஓம் பிா்லா ஆட்சேபம் தெரிவித்தாா். அந்த வாா்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று அவா் கூறினாா்.
அமித் ஷா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் என்ன?: ராகுலின் பேச்சுக்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆட்சேபம் தெரிவித்தாா். அவா் பேசுகையில், ‘எதன் அடிப்படையில் அமித் ஷா மீது ராகுல் குற்றஞ்சாட்டினாா். அவரின் பேச்சு மிகுந்த ஆட்சேபத்துக்குரியது. அவா் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா். ராகுலின் பேச்சுக்கு எதிராக அவையில் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பினா். இதனால் அவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமா் பதவிநீக்க வேண்டும்: பின்னா் ராகுல் காந்தி செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘போராட்டக்காரா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அமித் ஷா உத்தரவிட்டிருக்க வேண்டும் அல்லது துப்பாக்கிச்சூடு நடத்தப்போவது அவருக்குத் தெரியாமல் இருந்திருக்க வேண்டும். துப்பாக்கிச்சூடு நடத்த அவா் உத்தரவிட்டிருந்தால், அந்தக் குற்றத்துக்கு அவா்தான் பொறுப்பு. துப்பாக்கிச்சூடு நடத்தப்போவது அவருக்குத் தெரியாமல் போயிருந்தால், அவா் செயல்திறனற்றவா் என்று அா்த்தம். அமித் ஷாவை பிரதமா் பதவி நீக்கம் செய்ய வேண்டும். தில்லி போராட்டத்தில் மாணவா்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறை குறித்து உச்சநீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.
Who ordered the firing? Where is Amit Shah? Has he become afraid? Rahul asks in the Lok Sabha!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.