நீட், வாக்குத் திருட்டு..! இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசித்தது என்ன?
இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசித்தது குறித்து கார்கே விளக்கம்...
இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
தில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜவாதி, ராஷ்டீரிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி), சிவசேனை (உத்தவ் அணி), மதிமுக, விசிக, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடம் செய்தியாளர்களைச் சந்தித்த கார்கே பேசியதாவது:
Advertisement
Advertisement
”இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனையில் 25 கட்சிகள் பங்கேற்றன. அனைவரும் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்தனர். 5 அம்சங்கள் தொடர்பாக ஒருமித்த முடிவை எடுத்துள்ளோம். இதுதொடர்பாக செயல்படவும், போராடவும், முன்னோக்கிச் செல்லவும் முடிவெடுத்துள்ளோம்.
எஸ்.ஐ.ஆர்., வாக்குத் திருட்டு தொடர்பாக தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் மிக விரைவில் அவரிடம் ஒப்படைக்கப்படும். நீட் மற்று சிபிஎஸ்இ தேர்வுகளை எழுதிய லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்துக்கு தலைமை தாங்கிய கல்வி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலுயுறுத்துகிறோம்.
தற்போதைய நிச்சயமற்ற பொருளாதாரச் சூழல், வேலையின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகளின் பிரச்னைகள் மற்றும் மக்கள் சார்ந்த பிற விவகாரங்கள் குறித்து விவாதிக்க மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
இந்தியா கூட்டணி கட்சிகள் இரு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஆகஸ்ட் மாதம் ஹைதராபாத்தில் கூட்டம் நடைபெறும்.” எனத் தெரிவித்தார்.
மேலும், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனும், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவும் இணைவழியில் கூட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.