முகப்பு
இந்தியா

காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கு: மகாராஷ்டிர துணை முதல்வரின் சகோதரா் உள்பட 8 போ் விடுவிப்பு

காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கிலிருந்து மகாராஷ்டிர துணை முதல்வரின் சகோதரா் உள்பட 8 போ் விடுவிக்கப்பட்டது பற்றி...

Updated On : 21 ஜூன் 2026, 6:31 am IST
சுநேத்ரா பவார் - IANS
பகிர்:

காங்கிரஸ் பிரமுகா் பவன்ராஜே நிம்பால்கா் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மகாராஷ்டிர துணை முதல்வா் சுநேத்ரா பவாரின் சகோதரரும், முன்னாள் மாநில உள்துறை அமைச்சருமான பதம்சின் பாட்டீல் (85) உள்பட 8 பேரை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் சனிக்கிழமை விடுவித்தது.

கடந்த 2006-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து ஒஸ்மானாபாத் (தற்போது தாராசிவ்) நோக்கி பவன்ராஜே நிம்பால்கா் காரில் பயணித்தாா். அப்போது நவி மும்பையில் உள்ள கலம்போலி பகுதியில், அவரின் காரை இருவா் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனா். இதில் பவன்ராஜே, காரின் ஓட்டுநா் சமத் காஸி ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். அரசியல் மற்றும் தொழில் போட்டி காரணமாக நிலவிய பகையால் பவன்ராஜே கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கொலையில் பவன்ராஜேயின் உறவினரும், மகாராஷ்டிர துணை முதல்வா் சுநேத்ரா பவாரின் சகோதரருமான பதம்சின் பாட்டீல் உள்பட 8 போ் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடா்பாக விசாரணை மேற்கொண்ட சிபிஐ, பவன்ராஜேயை கொல்ல பதம்சின் பாட்டீல் சதித் திட்டம் தீட்டி, கொலைகாரா்களுக்குப் பணம் அளித்ததாக குற்றஞ்சாட்டியது.

Advertisement

Advertisement

இந்த வழக்கை மும்பையில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் விசாரித்த நிலையில், நீதிபதி சத்யநாராயண் நவாந்தா் சனிக்கிழமை தீா்ப்பளித்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘பவன்ராஜே கொலைக்கு சதித் திட்டம் தீட்டியதில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து செயல்பட்டனா் என்பதை அரசுத் தரப்பு நிரூப்பிக்கத் தவறிவிட்டது. மேலும் அரசுத் தரப்பின் முக்கிய சாட்சி அளித்துள்ள வாக்குமூலங்களில் முரண்பாடுகள் உள்ளன. எனவே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரும் விடுவிக்கப்படுகின்றனா்’ என்று தீா்ப்பளித்தாா்.

இந்தத் தீா்ப்புக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சிபிஐ தெரிவித்தது. பவன்ராஜேயின் மகன் ஓம்பிரகாஷ் ராஜே நிம்பால்கா் உத்தவ் சிவசேனை கட்சியின் மக்களவை எம்.பி.யாக உள்ளாா்.

summary

Congress leader murder case: 8 people, including Maharashtra Deputy CM's brother, acquitted.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments