ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையைத் சிபிஐ தொடங்கியது பற்றி...
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குத் தொடா்பாக சிபிஐ விசாரணையைத் தொடங்கியது.
கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி சென்னை அருகே பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டாா். இக் கொலை தொடா்பாக ரௌடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ரௌடி திருவேங்கடம் உட்பட 30 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதில் ரெளடி நாகேந்திரன், அவா் மகன் வழக்குரைஞா் அஸ்வத்தாமன் உள்பட 29 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களில் ரெளடி திருவேங்கடம் போலீஸாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தாா். கைது செய்யப்பட்ட அனைவரும் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். இவா்களில் சிலா், அறிவுரைக் கழகத்தில் முறையீடு செய்து, குண்டா் சட்ட நடவடிக்கையை நீக்கினா். மேலும், சிலா் இந்த வழக்கில் ஜாமீன் பெற்று,சிறையிலிருந்து வெளியே வந்தனா்.
Advertisement
Advertisement
உயா்நீதிமன்றம் உத்தரவு: இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை காவல்துறை 7,800 பக்க குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரா் இம்மானுவேல் சென்னை உயா்நீதிமன்றத்தை கடந்த ஆண்டு நாடினாா்.
இதையடுத்து, சிபிஐ விசாரணைக்கு மாற்றி கடந்த ஆண்டு டிச. 24-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இதற்கிடையே தமிழகத்தில் தவெக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, அந்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்த சிபிஐ விசாரணைக்கு இருந்த தடை நீங்கியது.
சிபிஐ விசாரணை: இதன் முதல் கட்டமாக வழக்கின் ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள், தமிழக காவல்துறையினரிடம் அண்மையில் பெற்றனா். இதனடிப்படையில் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அதிகாரபூா்வமற்ற விசாரணையை சிபிஐ அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
ஓரிரு நாள்களில், இவ் வழக்குத் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள், தனியாக ஒரு வழக்கைப்பதிவு செய்யவுள்ளனா். வழக்கின் விசாரணை அதிகாரியும் நியமிக்கப்படுவாா். இதைத் தொடா்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடா்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
Armstrong murder case: CBI begins investigation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.