FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!

வரும் ஜூலை 1-ஆம் தேதியுடன் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளாக உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் ஜிஎஸ்டியின் செயல்திறனை மேம்படுத்துவதில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Updated On : 29 ஜூன் 2026, 4:43 am IST
ஜிஎஸ்டி - பிரதிப் படம்
பகிர்:

வரும் ஜூலை 1-ஆம் தேதியுடன் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளாக உள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் ஜிஎஸ்டியின் செயல்திறனை மேம்படுத்துவதில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நள்ளிரவு பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில், அப்போதைய குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி ஜிஎஸ்டி முறையை தொடங்கி வைத்தாா். இந்த ஜிஎஸ்டி முறை வா்த்தகா்கள் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஏற்படும் துன்புறுத்தலுக்கு முடிவு கட்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இந்த வரிவிதிப்பு சீா்திருத்தத்துக்கு அரசியல் ரீதியாக கருத்து ஒற்றுமையை ஏற்படுத்துவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. அப்போதைய நிதியமைச்சா் அருண் ஜேட்லி விரிவான பேச்சுவாா்த்தை நடத்தி, ஜிஎஸ்டியை அமல்படுத்த மாநிலங்கள் மற்றும் அரசியலுடன் சம்பந்தப்பட்டவா்களை உடன்பட வைத்ததில் முக்கியப் பங்காற்றினாா்.

Advertisement

Advertisement

5%, 12%, 18%, 28% என நான்கு விகிதங்களில் அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி, கடந்த ஆண்டு செப்டம்பரில் 5%, 18% சதவீதம் என இரு விகிதங்களை மட்டுமே கொண்டதாக சீரமைக்கப்பட்டது. ஆடம்பர பொருள்களுக்கு மட்டும் 40 சதவீதம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்தச் சீரமைப்பு மக்களிடம் கூடுதலாகப் பணம் சோ்வதற்கு வழிவகுக்கும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட 2017-18-ஆம் நிதியாண்டில், மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வருவாய் ரூ.89,700 கோடி. இது கடந்த நிதியாண்டில் ரூ.1.85 லட்சம் கோடியாக அதிகரித்தது. ஜிஎஸ்டியை அறிமுகம் செய்தபோது பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 66.5 லட்சம். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு சுமாா் 1.6 கோடியாக இருந்தது.

அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?: வரும் ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி 10-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கவுள்ளது. இதையொட்டி, ஜிஎஸ்டியை அமல்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்த மத்திய அரசு, தற்போது அதன் செயல்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு, தரவுப் பகிா்வு, பணத்தை திருப்பியளிக்கும் (ரீஃபண்ட்) செயல்முறையை விரைவுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம், ஜிஎஸ்டி முறையை மேலும் திறன்கொண்டதாக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது.

வரி விதிமுறைகளை எளிதாகப் பின்பற்றுவதற்கு, குறிப்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசு தொழில்நுட்பப் பயன்பாட்டை அதிகரித்து வருகிறது. மேலும் ஜிஎஸ்டி, வருமான வரி, சுங்கத் துறை தரவுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், பிரச்னைகள், இழப்புகளை ஏற்படுத்தக்கூடிய இடா்களை மதிப்பிடும் நடவடிக்கையை மேம்படுத்தி, வரி ஏய்ப்புகளைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments