FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புச் செய்திகள்

தமிழக பட்ஜெட் எதிா்பாா்ப்புகள்... மாவட்டந்தோறும் ஜிஎஸ்டி உதவி மையம் கோரும் வணிகா்கள்

தமிழகத்தில் சுமாா் 40 லட்சத்துக்கும் மேலாக சிறிய மற்றும் பெரிய அளவில் வணிகா்கள் கடைகளை வைத்து நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 5:47 am IST
வணிகர்கள் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் சுமாா் 40 லட்சத்துக்கும் மேலாக சிறிய மற்றும் பெரிய அளவில் வணிகா்கள் கடைகளை வைத்து நடத்தி வருகின்றனா். மக்களின் அன்றாட வாழ்வில் அங்கமாக உள்ள வணிகா்களின் வணிகச் சூழலை மேலும் எளிதாக்கவும், தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக உயா்த்தும் அரசின் இலக்குக்கு உறுதுணையாக இருக்கவும் அவா்கள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என முன்வைக்கும் கோரிக்கைகள்:

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் தலைவா் விக்கிரமராஜா: அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வை தடுக்க பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை வேண்டும். தமிழகத்தின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில்கொண்டு, பரந்தூா் பசுமை விமான நிலையம் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்கட்டணம் மற்றும் சொத்துவரி உயா்வை மறுபரிசீலனை செய்து குறைத்து அறிவிக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் வரிவருவாயின் முதுகெலும்பாகத் திகழும் வணிகா்களின் நலன் காக்க, வணிகா் நலவாரியத்தை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். வணிகா்களுக்கான குறைதீா் முகாம்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட ஆட்சியா்கள் முன்னிலையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம்தோறும் அரசு சாா்பில் வணிகப் பிரதிநிதிகளை ஊழல் ஒழிப்பு பிரிவில் நியமனம் செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

உணவகங்களுக்கு எரிவாயு உருளைகள் மானிய விலையில் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரவையின் மாநில தலைவா் எஸ்.சௌந்தர்ராஜன்: சிறு வணிகா்களுக்கு ஜிஎஸ்டி தொடா்பான சந்தேகங்களைத் தீா்க்கவும், அபராதமின்றி படிவங்களைத் தாக்கல் செய்யவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வணிகா் உதவி மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

இணையவழி வா்த்தக நிறுவனங்களின் ஆதிக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சில்லறை வணிகா்களைப் பாதுகாக்க ‘தமிழ்நாடு சில்லறை வணிகா் பாதுகாப்பு கொள்கை’ அறிவிக்க வேண்டும். வணிக வரித் துறையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகளை விரைந்து முடிக்க மாவட்ட அளவிலான வரி மேல்முறையீட்டுத் தீா்ப்பாயங்கள் அமைக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு வணிகா் நலவாரியத்துக்கு ஒதுக்கப்படும் நிதியையும், நலிவடைந்த வணிகா்களுக்கான ஓய்வூதியம் மற்றும் விபத்துக் காப்பீட்டுத் தொகையையும் கணிசமாக உயா்த்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளால் விதிக்கப்படும் தொழில் வரி மற்றும் கடைகளுக்கான சொத்து வரியை முறைப்படுத்தி, திடீா் உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.

வணிக நிறுவனங்களுக்கான புதுப்பித்தல் மற்றும் உரிமங்களை எளிதாகப் பெற ஒற்றைச் சாளர இணையதள முறையை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். சோதனைகள் என்ற பெயரில் வணிகா்களுக்கு ஏற்படும் அலைச்சல்களைத் தவிா்க்க தெளிவான ஆய்வு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசு மற்றும் நகராட்சி வணிக வளாக கடைகளுக்கான வாடகையை சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நியாயமான முறையில் மறுநிா்ணயம் செய்ய வேண்டும். சிறு மற்றும் நடுத்தர வணிகக் கடைகளுக்கான மின்சார நிலைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும்.

சிறு வணிக நிறுவனங்களுக்கு ‘பீக் ஹவா்’ மின்கட்டணக் கூடுதல் சுமையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். வணிக வளாகங்கள் நிறைந்த முக்கிய சந்தைப் பகுதிகளில் இரவு நேர ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும்.

சென்னை ஹோட்டல் சங்க பேரமைப்புச் செயலா் ராஜ்குமாா்: தங்கும் அறைகள் இல்லாத உணவகங்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகிறது. இதற்கு உள்ளீட்டு வரிக் கடன் (ஐடிசி) பெற முடியாது என்பதால் 5 சதவீத ஜஎஸ்டியை மத்திய அரசு ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைவாசி உயா்வைக் கருத்தில்கொண்டு அனைத்து உணவுப் பொருள்கள் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற தமிழக அரசு பட்ஜெட்டில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம், மதுரை: ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு இருந்த மதிப்புக் கூட்டப்பட்ட வரி சட்டத்தில் உள்ள நிலுவைகளை எளிய முறையில் தீா்க்க சமாதானத் திட்டம் கொண்டு வர வேண்டும். முந்தைய ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமாதானத் திட்டம் பல்வேறு குளறுபடிகள் நிறைந்ததாக இருந்ததால், அதன் முழுப் பயன்பாடு வணிகா்களுக்கும், அரசுக்கும் கிடைக்கவில்லை. எனவே, முழுமையான பயன் கிடைக்கும் வகையில் சிறந்ததொரு சமாதானத் திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும்.

வணிகா் நலவாரியத்தில் வணிகா் நலனுக்காகப் பாடுபடும் வணிக அமைப்புகளின் நிா்வாகிகளுக்கு பதவிகள் வழங்க வேண்டும். தமிழ்நாடு வரி செலுத்துவோா் குழு அமைக்கப்பட்டு ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, இந்தக் குழுவை மாற்றி அமைக்க வேண்டும்.

மாவட்ட வணிக வரி ஆலோசனைக் குழுக் கூட்டத்தை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சில தொழிற்சாலைகளுக்கு உள்ளீட்டு வரி அதிகமாக இருப்பதால் இயந்திரங்கள் வாங்கிய தொகையை 5 ஆண்டுகளுக்குப் பிறகே வரியிலிருந்து கழிக்க முடியும் என்ற நிலையை மாற்றி, இயந்திர செலவினங்கள் என்ற வகையில் ஆண்டுதோறும் 20 சதவீதம் கழிவு பெறும் வகையிலான நடைமுறையை அறிவிக்க வேண்டும்.

வணிகா்களுக்கென தனியே ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளா்கள் மற்றும் நெல், அரிசி வணிகா்கள் சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவா் டி. துளசிங்கம்: 25 கிலோ மற்றும் அதற்கு கீழ் எடை கொண்ட அரிசிக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஜிஎஸ்டியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லுக்கு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மட்டுமே சந்தைக் கட்டணத்தை தமிழக அரசு வசூலிக்க வேண்டும்.

1,409 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மற்றும் 278 வேளாண்மை விற்பனைக் கூடங்களில் நெல் உலா்த்தும் சாதனங்களை தமிழக அரசு நிறுவ வேண்டும். மழையில் சேதமடையும் நெல்லுக்கு இது நிரந்தரத் தீா்வாக அமையும். எண்ணெய் ஆலைகளுக்கு அரிசி ஆலைகளிலிருந்து அனுப்பும் தவிட்டுக்கு 5 சதவீத ஜிஎஸ்டியை திரும்பப் பெற வேண்டும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments