FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து!

நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது பற்றி...

குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி முன் நீட் தோ்வு எழுதுவதற்காக பெற்றோா்களுடன் காத்திருந்த மாணவ, மாணவிகள் - கோப்புப்படம்
பகிர்:

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர்.

தோ்வு முடிந்து நான்கு நாள்களுக்குப் பிறகு, நீட் தேர்வின்போது சில இடங்களில் முறைகேடுகள் நடந்ததாகத் தகவல்கள் கிடைத்தன.

Advertisement

Advertisement

நீட் தேர்வில் கேட்கப்பட்ட 720 மதிப்பெண்களில், ஏறக்குறைய 600 மதிப்பெண்கள், தேர்வுக்கு முன்பே ராஜஸ்தான் மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்ட ஒரு வினா-விடை வங்கியில் இடம்பெற்றிருந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக குற்றச்சாட்டுகளை ராஜஸ்தான் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகின்றது.

விசாரணையில், கைகளால் எழுதப்பட்டு மாணவர்களிடையே விநியோகிக்கப்பட்ட ’மாதிரி வினாத் தாள்’ ஒன்று கண்டறியப்பட்டது. அதில், மே 3 அன்று நடைபெற்ற தேர்வில் இடம்பெற்றிருந்த கேள்விகளைப் போலவே சுமார் 100 கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்டிருந்த தேசிய தேர்வு முகமை, “இந்தப் பிரச்னையால் நோ்மையான முறையில் தோ்வு எழுதிய பெரும்பான்மையான தோ்வா்களின் உழைப்பும், கண்ணியமும் ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படாது. விசாரணை அமைப்புகள் தங்கள் பணியை முடிக்க தேவையான கால அவகாசத்தை வழங்குமாறு தோ்வா்களைக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மத்திய முகமைகளுடன் ஒருங்கிணைந்து தேசிய தேர்வு முகமை ஆய்வு செய்த தகவல்கள் மற்றும் சட்ட அமலாக்க முகமைகளால் பகிரப்பட்ட விசாரணை முடிவுகளின் அடிப்படையில், தேர்வர்கள், பெற்றோர்கள் மற்றும் மக்களிடையே தேசிய தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, மத்திய அரசு ஒப்புதலுடன் மே 3, 2026 நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கிறோம்.

இந்த தேர்வை மீண்டும் நடத்த முடிவு செய்துள்ளோம். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 2026 மே மாதத் தேர்வுக்காக மாணவ, மாணவிகளால் பதிவு செய்யப்பட்ட விவரங்கள், தேர்வர்களின் தகுதிநிலை மற்றும் அவர்களால் தேர்வு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் உள்ளிட்டவை மறுதேர்வுக்கு அப்படியே எடுத்துக்கொள்ளப்படும். புதிதாகப் பதிவு செய்யத் தேவையில்லை.

கூடுதல் தேர்வுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. மாணவர்கள் ஏற்கெனவே செலுத்திய கட்டணங்கள் அவர்களுக்குத் திருப்பியளிக்கப்படும். தேசிய தேர்வு முகமையின் நிதியைப் பயன்படுத்தி மறுதேர்வு நடத்தப்படும்.

வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிஐ-க்கு தேசிய தேர்வு முகமை முழு ஒத்துழைப்பு வழங்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2013 முதல் ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில், நடந்துமுடிந்த தேர்வு ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை.

summary

NEET Exam Held on May 3rd Cancelled!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments