1,822 இந்திய சீக்கியர்கள் நாளை பாகிஸ்தான் பயணம்!
இந்தியாவைச் சேர்ந்த 1,822 சீக்கியர்கள் நாளை பாகிஸ்தான் செல்வது குறித்து...

இந்தியாவைச் சேர்ந்த 1,822 சீக்கியர்கள் ஆன்மீகப் பயணமாக நாளை பாகிஸ்தான் நாட்டுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் வசிக்கும் சீக்கியர்கள் எல்லைகளைக் கடந்து இருநாடுகளில் இருக்கும் சீக்கிய கோயில்களுக்கு (குருத்வாரா) ஒவ்வொரு ஆண்டும் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானில் உள்ள சீக்கிய கோயில்களுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள அனுமதிகோரி 1,828 சீக்கியர்களின் கடவுச்சீட்டை பாகிஸ்தான் தூரதகத்துக்கு அனுப்பி சிரோமணி குருத்வாரா பர்பந்தக் கமிட்டியின் எனு அமைப்பு விண்ணப்பித்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் செல்வதற்கு 1,822 சீக்கியர்களுக்கு விசா வழங்கப்பட்ட நிலையில், வெவ்வேறு காரணங்களால் 6 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், அனுமதி பெற்ற 1,822 சீக்கியர்கள் நாளை (நவ. 22) காலை அட்டாரி-வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், டிச.1 ஆம் தேதி தாயகம் திரும்பும் சீக்கியர்கள், பாகிஸ்தானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ நங்கனா சாஹிப், குருத்வாரா ஸ்ரீ பஞ்சா சாஹிப், லாகூரில் உள்ள குருத்வாரா ஸ்ரீ தேரா சாஹிப், குருத்வாரா ஸ்ரீ ரோரி சாஹிப் மற்றும் குருத்வாரா ஸ்ரீ சச்சா சவுதா ஆகிய கோயில்களுக்கு நேரில் சென்று வழிபாடு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.