தொகுதி மறுவரையறை மசோதா: பாஜகவுக்கு 371 உறுப்பினர்கள் ஆதரவா?
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக 371 உறுப்பினர்கள் மக்களவையில் வாக்களிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக 371 உறுப்பினர்கள் மக்களவையில் வாக்களிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இணைக்கப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற, மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர் ( இதில் 3 இடங்கள் காலியாக உள்ளன) எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும். இதில், பெரும்பான்மைக்கு 360 உறுப்பினர்களின் வாக்குகள் தேவைப்படுகிறது.
ஆனால், பெரும்பான்மையைத் தாண்டி 371 மக்களவை எம்.பி.க்களின் ஆதரவு மத்திய அரசுக்கு கிடைத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
மக்களவையில் பாஜகவுக்கு சுமார் 320 உறுப்பினர்கள் உள்ளனர். வெளியிலிருந்து ஆதரவு தரும் கட்சிகளில் திமுகவுக்கு 22 உறுப்பினர்களும், சரத் பவார் கட்சிக்கு 8 உறுப்பினர்களும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர். அதேநேரம், சுயேச்சை எம்.பி.க்கள் 17 பேரின் ஆதரவையும் சேர்த்து 371 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது.
மக்களவையில் மோடி அரசால் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அரசியலமைப்புத் திருத்த மசோதாவால், மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்படவுள்ளது.
இதன்மூலம், பட்டியலினத்தோர் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர் (எஸ்டி) இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை 50% அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டிற்குள்ளும் மகளிர் இடஒதுக்கீடு அமலாகும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி மேலும் பேசுகையில், ”தொகுதி மறுவரையறை மசோதா தற்போது நிறைவேற்றப்படுவது முக்கியத் தேவையாகும். இது இப்போது நிறைவேறினால், மறுவரையறை செய்யப்பட்ட எல்லைகளுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீட்டை 2029 மக்களவைத் தேர்தலிலேயே நாம் அமல்படுத்தலாம். இல்லையெனில், 2034 தேர்தல் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சட்டத்தின் கீழ், மத்திய அரசால் நியமிக்கப்படும் உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தொகுதி மறுவரையறை ஆணையத்திற்குத் தலைமை தாங்குவார். தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்படும் ஒரு தேர்தல் ஆணையர் இக்குழுவில் உறுப்பினராக இருப்பார்.
அதேபோல, ஒவ்வொரு மாநிலத்துக்கான ஆணையத்தில், அந்தந்த மாநிலத் தேர்தல் ஆணையரும் இடம்பெறுவார். மேலும், அந்தந்த மாநிலங்களின் 5 மக்களவை எம்.பி.க்கள் மற்றும் 5 எம்.எல்.ஏ.க்கள் இணை உறுப்பினர்களாக இருப்பர்.
மாநிலங்களின் அரசியல் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் மக்களவை எம்.பி.க்களை அவைத்தலைவர் பரிந்துரைப்பார். அதேபோல, சட்டப்பேரவையின் கட்சிகளின் பிரதிநிதித்துவத்திற்கு ஏற்ப எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை அவைத் தலைவர் பரிந்துரைப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதில் திருத்தங்கள் மேற்கொள்ளவோ, நிராகரிக்கவோ நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கும் என்றும் அந்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.