FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் அமல்: மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.1,423 கோடி நிதி விடுவிப்பு

வன்கொடுமை தடுப்புச் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,423 கோடி நிதி விடுவித்துள்ளது.

மாநிலங்களுக்கு மத்திய அரசு ரூ.1,423 கோடி நிதி விடுவிப்பு
பகிர்:

வன்கொடுமை தடுப்புச் சட்டங்களை அமல்படுத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,423 கோடி நிதி விடுவித்துள்ளது.

1955-ஆம் ஆண்டு சிவில் உரிமைகள் பாதுகாப்பு சட்டம், 1989-ஆம் ஆண்டு எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமல்படுத்துவது, அது தொடா்பான வழக்குகளை விரைந்து விசாரணை நடத்துவது, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்கு ஆகியவற்றுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு நிதியாண்டிலும் நிதியுதவி அளித்து வருகிறது. கடந்த 3 நிதியாண்டுகளில் அளிக்கப்பட்ட நிதி குறித்த தகவல்களை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சிவில் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அமல்படுத்துகின்றன. அதைச் செயல்படுத்துவதற்கும், விசாரணை அமைப்புகளை வலுப்படுத்தவும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நிதி அளிக்கிறது.

Advertisement

Advertisement

அதன்படி, கடந்த 2022-2023-ஆம் நிதியாண்டில் ரூ.392.71 கோடி நிதி விடுவிக்கப்பட்டது. 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.535.30 கோடியும், 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.495.29 கோடியும் நிதி விடுவிக்கப்பட்டது. அதாவது 3 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.1,423.30 கோடி நிதி விடுவிக்கப்பட்டது.

அந்த நிதியைக் கொண்டு, 15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகளை விசாரிக்க 217 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த நிதியைக் கொண்டு, மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட 88,172 பேருக்கு 2022-23-ஆம் நிதியாண்டில் நிதி அளிக்கப்பட்டுள்ளது. 2023-24ஆம் நிதியாண்டில் 79,667 பேருக்கும், 2024-25ஆம் நிதியாண்டில் 99,216 பேருக்கும் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

ஜாதி கலப்பு திருமணம் செய்த 14,225 பேருக்கு 2022-23ஆம் நிதியாண்டிலும், 26,050 பேருக்கு 2024-25-ஆம் நிதியாண்டிலும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கடந்த 2022-ஆம் ஆண்டில் 67,633 வழக்குகளும், 2023-ஆம் ஆண்டில் 70,725 வழக்குகளும், 2024-ஆம் ஆண்டில் 65,646 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2024-ஆம் ஆண்டு இறுதி நிலவரப்படி அந்த வழக்குகளில் 3,92,006 வழக்குகள் நிலுவையில் இருந்தன என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments