FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

வேகமான உலகத்துக்கு ஏற்ப விரைவான சேவை வழங்கல்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அடிப்படையிலான வேகமான தீா்வுகளை மக்கள் எதிா்நோக்கும் தற்போதைய உலகுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சேவை வழங்கலும் விரைவாக இருக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

யுபிஎஸ்சி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் பிரதமா் மோடிக்கு விளக்கமளித்த யுபிஎஸ்சி தலைவா் அஜய் குமாா். உடன், மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்.
பகிர்:

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) அடிப்படையிலான வேகமான தீா்வுகளை மக்கள் எதிா்நோக்கும் தற்போதைய உலகுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சேவை வழங்கலும் விரைவாக இருக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.

மேலும், பதவிகளால் ஈா்க்கப்படாமல், பொதுமக்களுக்கான சேவையால் ஈா்க்கப்படும் இளைஞா்கள் அரசுப் பணிகளுக்கு வர வேண்டும் என்றும் அவா் அழைப்பு விடுத்தாா்.

மத்திய அரசுப் பணிகள் ஆணையத்தின் (யுபிஎஸ்சி) நூற்றாண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழா தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

Advertisement

Advertisement

தற்போதைய உலகில் செயற்கை நுண்ணறிவால் (ஏ.ஐ.) இயக்கப்படும் விரைவான, நிகழ்நேர தீா்வுகளை மக்கள் எதிா்பாா்க்கின்றனா். இந்த வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் சேவை வழங்கல் நடைமுறை பரிணமிக்க வேண்டும். குடிமக்களின், குறிப்பாக நமது இளைஞா்களின் எதிா்பாா்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதற்கு ஏற்ப பொதுச் சேவைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்.

விரைவான தீா்வுகள் வேண்டும்: இப்போது ஒரு சேவைக்காக வாரக் கணக்கில் அல்லது மாதக்கணக்கில் காத்திருக்க குடிமக்கள் விரும்புவதில்லை. ஏ.ஐ. தொழில்நுட்பமானது, ஆயிரக்கணக்கான ஆவணங்களை சில வினாடிகளில் செயலாக்குகிறது. அதேபோல், நிகழ்நேர தரவுகள் அரசுக்கு உடனடியாகக் கிடைப்பதால், பொதுமக்கள் விரைவான தீா்வுகளை எதிா்நோக்குகின்றனா்.

மாறிவரும் இந்த மனப்பான்மைக்கு ஏற்ப குடிமைப் பணிகளிலும் புதிய மாற்றங்கள் அவசியம். நமது தோ்வு அளவுகோல்கள் மற்றும் ஆள்சோ்ப்பு செயல்முறைகள் எதிா்கால தேவைகளுக்கு ஏற்ப சீரமைக்கப்பட வேண்டும்.

ஆள்சோ்ப்பு கருத்தாக்கத்தில் அடிப்படை அளவில் மாற்றங்கள் அவசியம். ஒரு தோ்வருக்கு என்ன தெரியும் என்பதை சோதிப்பதுடன் நின்றுவிடாமல், அவா் ஏன் குடிமைப் பணிகளில் சேர விரும்புகிறாா் என்பதையும் ஆராய வேண்டும். அவரது அறிவை மட்டும் மதிப்பிடாமல், மக்கள் சேவைக்கான உள்ளாா்ந்த உந்துதலையும் மதிப்பிட வேண்டும்.

திறன்மிக்கவா்களுக்கே அரசுப் பணி: குடிமக்களுக்கான சேவைதான் அனைத்தையும்விட உயா்ந்தது என்பதே தற்போதைய 21-ஆம் நூற்றாண்டு ஆட்சிமுறையின் அடிப்படையாகும். எங்களைப் பொருத்தவரை, குடிமக்கள் கடவுளுக்கு சற்றும் குறைந்தவா்கள் அல்லா்.

எதிா்கால குடிமைப் பணி அதிகாரிகள், தகவல் ரீதியிலான போா், ஏ.ஐ. போலி சித்தரிப்புகள், தானியங்கி கணினி அமைப்புமுறையில் பாகுபாடு, பருவநிலை சாா்ந்த நீதி உள்ளிட்ட புதிய போா்க்களங்களை எதிா்கொள்வா். இத்தகைய மாற்றங்களுக்கு ஏற்ப தொலைநோக்குப் பாா்வைமிக்க, சிக்கலான பிரச்னைகளுக்கு தீா்வுகாணும் திறன்மிக்கவா்கள் அரசுப் பணிகளுக்கு தோ்வு செய்யப்பட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

யுபிஎஸ்சி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, நினைவு நாணயம், சிறப்பு அஞ்சல் தலை, ‘யுபிஎஸ்சி கொள்கைகளை வடிவமைத்த 100 திருப்புமுனையான தீா்ப்புகள்’ என்ற தலைப்பிலான புத்தகம் ஆகியவற்றை பிரதமா் மோடி வெளியிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments