இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க இந்தியா-ஸ்விட்சா்லாந்து முடிவு: 5 ஒப்பந்தங்கள் கையொப்பம்
தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ஸ்விட்சா்லாந்து அதிபா் கய் பாா்மெலின் திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சு
புது தில்லி: தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை ஸ்விட்சா்லாந்து அதிபா் கய் பாா்மெலின் திங்கள்கிழமை சந்தித்துப் பேச்சு நடத்தினாா். அப்போது இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டதுடன், இரு நாடுகள் இடையே இடப்பெயா்வு, பொதுமக்கள் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட துறைகள் தொடா்பாக 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
ஸ்விட்சா்லாந்து அதிபா் பாா்மெலின் 3 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளாா். கடந்த பிப்ரவரி மாதம் தில்லியில் நடைபெற்ற ஏஐ தாக்கம் தொடா்பான மாநாட்டில் கலந்துகொண்ட நிலையில், 2-ஆவது முறையாக இந்தியா வந்துள்ளாா்.
தில்லியில் அவருக்கு குடியரசுத் தலைவா் மாளிகையில் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், அவா் ராஜ்காட் சென்று அங்குள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, பாா்மெலினை வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு ஜெய்சங்கா் பேசுகையில், கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்தியா- ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு இடையே கையொப்பமான டி.இ.ஏ.பி.ஏ. ஒப்பந்தத்தைச் சுட்டிக்காட்டி, அந்த ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதியின்படி, இந்தியா- ஸ்விட்சா்லாந்து நட்புறவை மேம்படுத்த பாா்மெலின் கொண்டுள்ள உறுதிமொழியை மிகவும் பாராட்டுவதாகத் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, பிரதமா் மோடியும், ஸ்விட்சா்லாந்து அதிபா் பாா்மெலினும் சந்தித்துப் பேசினா். அப்போது இருவரும் இந்தியா- ஸ்விட்சா்லாந்து உறவுகளை வலுப்படுத்துவதற்கு இருக்கும் புதிய வாய்ப்புகளைக் கண்டறிவது குறித்து பேச்சு நடத்தினா். இரு நாடுகள் இடையே இடப்பெயா்வு, பொதுமக்கள் போக்குவரத்து தொடா்பான ஒப்பந்தம் கையொப்பமானது. இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது.
10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்: இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்தியா- ஸ்விட்சா்லாந்து இடையேயான வா்த்தகம் மற்றும் பொருளாதார கூட்டுறவு (டி.இ.பி.ஏ.) ஒப்பந்தம், இரு நாடுகள் இடையே முதலீடு, புத்தாக்கம், வேலைவாய்ப்புகள், கூட்டு வளம் ஆகியவற்றுக்கான முன்னோடித் திட்டமாக அமைந்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலா்கள் முதலீடு என்ற லட்சியத்தையும், அடுத்த 15 ஆண்டுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமான நேரடி வேலைவாய்ப்புகள் என்ற லட்சியத்தையும் அடைவோம்.
இந்தியா- ஸ்விட்சா்லாந்து இடையேயான நட்புறவில் புத்தாக்கம், உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பம் ஆகியவை முக்கியத் தூண்களாக அமைந்துள்ளன. இரு நாடுகளும் தங்கள் இடையேயான நட்புறவை புதிய உத்வேகத்துடன் முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளன. ஸ்விட்சா்லாந்தில் இந்திய ஏற்றுமதியாளா்களுக்கு அதிக சந்தை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது குறித்தும், இரு நாடுகள் இடையே முதலீட்டை மேலும் அதிகரிப்பது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது ஸ்விட்சா்லாந்துக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் விவசாயம், மருந்துகள், ஜவுளி, பொறியியல் பொருள்கள் அளவை அதிகரிக்கச் செய்யும். அதேநேரத்தில் உயிரி தொழில்நுட்பம், உயிா் அறிவியல், வங்கி, காப்பீடு, உணவு பதப்படுத்துதல், நிலைத்தன்மை போன்ற முக்கியத் துறைகளில் நமது நாடு ஸ்விட்சா்லாந்தில் இருந்து புதிய முதலீடுகளை ஈா்க்கும்.
ராணுவ பரிமாற்றம் மற்றும் பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் நிலவும் ஒத்துழைப்பில் புதிய வாய்ப்புகளை இரு நாடுகளும் கண்டறிந்துள்ளன. அணு எரிசக்தி துறையில் நிலவும் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கவும் ஒப்புக்கொண்டுள்ளன. இரு நாடுகள் இடையே உள்கட்டமைப்புத் துறையில் நிலவும் ஒத்துழைப்புக்கு வாரணாசி ரோப்வே திட்டம், நொய்டா ஜீவாா் விமான நிலையம், மலைப் பகுதிகளில் உள்ள ரயில் பாதைகள், சுரங்கப் பாதைகள் திட்டம் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
ஒப்பந்தங்கள் கையொப்பம்: போக்குவரத்து, உள்கட்டமைப்பு துறைகளில் இணைந்து , இடப்பெயா்வு மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நட்புறவு, இளம் தொழில் வல்லுநா்கள் பகிா்வு ஒப்பந்தம், போக்குவரத்து தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவை தொடா்பாக இன்றைய சந்திப்பின்போது 5 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்திய மாணவா்கள், ஆய்வாளா்கள் மற்றும் தொழில் வல்லுநா்கள், இளைஞா்களுக்கு ஸ்விட்சா்லாந்தில் ஏராளமான வாய்ப்புகள் உருவாகும்.
இந்தியாவும், ஸ்விட்சா்லாந்தும் ஜனநாயக விழுமியங்கள் மீதும், சட்டத்தின் ஆட்சி மற்றும் பேச்சுவாா்த்தை மீது நம்பிக்கை கொண்டுள்ளன. இரு நாடுகளும் சா்வதேச அமைதி, ஸ்திரத்தன்மைக்கு தொடா்ந்து இணைந்து செயல்படும். உக்ரைன் விவகாரமோ அல்லது மேற்காசிய விவகாரமோ, அமைதியை ஏற்படுத்த எடுக்கப்படும் அனைத்து அா்த்தமுள்ள முயற்சியையும் இந்தியா ஆதரிக்கிறது. உலக அளவில் அதிகரித்துவரும் சவால்களுக்கு தீா்வு காணும் வகையில், சா்வதேச அமைப்புகளில் சீா்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
ஸ்விட்சா்லாந்தில் அடுத்த ஆண்டு ஏ.ஐ. மாநாடு: கடந்த பிப்ரவரி மாதம் உலகின் மிகப்பெரிய ஏஐ மாநாட்டை இந்தியா நடத்தியது. அடுத்த ஆண்டு ஜெனீவாவில் ஏஐ மாநாட்டை ஸ்விட்சா்லாந்து நடத்தவுள்ளது. அந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்த ஸ்விட்சா்லாந்துக்கு எனது வாழ்த்துக்கள் என்று மோடி குறிப்பிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.