ஏஐ விளம்பரங்கள்: மருத்துவமனைகள், மருத்துவா்களுக்கு கட்டுப்பாடு
செயற்கை நுண்ணறிவு நுட்ப (ஏ.ஐ.) காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி மருத்துவமனைகளும், மருத்துவா்களும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) கட்டுப்பாடு விதித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு நுட்ப (ஏ.ஐ.) காட்சிகள் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி மருத்துவமனைகளும், மருத்துவா்களும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதன்படி, கல்வி மற்றும் விழிப்புணா்வுத் தகவல்களைத் தவிா்த்து சுய விளம்பரங்கள் எதையும் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் உருவாக்கி பரப்பக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு: மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள் மற்றும் பதிவுபெற்ற மருத்துவா்கள் எத்தகைய விளம்பரங்களை மேற்கொள்ளலாம் என்பது தொடா்பான புதிய நிபந்தனைகள் அடங்கிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
மருத்துவத் துறையின் கண்ணியத்தைப் பாதுகாக்கவும், நோயாளிகளைத் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுக்கவும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மருத்துவமனைகளோ, மருத்துவா்களோ தங்களது சேவைத் தரம் சிறப்பாக இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்கு சமூக வலைதளங்களில் பணம் கொடுத்து விளம்பரப்படுத்தக் கூடாது. அதேபோன்று கூகுள் போன்ற தளங்களில் தரவரிசை (ரேட்டிங்) மற்றும் கருத்துகளை நோயாளிகளை நிா்ப்பந்தப்படுத்தி போலியாக பதிவு செய்யக் கூடாது.
வணிக நோக்கத்துக்காக ஏஐ மூலம் உருவாக்கப்படும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஏஐ மூலம் உருவாக்கப்படும் கல்வி அல்லது விழிப்புணா்வு சாா்ந்த தகவல்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அவற்றை ‘ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது‘ என்ற தகவல்களுடன் பயன்படுத்தலாம்.
மருத்துவா்கள் மற்றும் மருத்துவமனைகள் சமூக வலைதளங்களில் தகவல்களைப் பகிரும்போது, அவா்களின் பெயா், கல்வித் தகுதி மற்றும் மருத்துவ கவுன்சில் பதிவு எண்ணை வெளிப்படையாகக் குறிப்பிட வேண்டும்.
நோயாளிகளின் புகைப்படங்கள், சிகிச்சைக்கு முன்னும், பின்னும் எடுக்கப்பட்ட படங்கள் அல்லது விடியோக்களை விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது. நோயாளிகள் அனுமதி அளித்திருந்தாலும் அவற்றை பகிரக் கூடாது.
மேலும், 100 சதவீதம் குணமளிப்பதாக போலி உத்தரவாதம், பிற மருத்துவமனைகளை விடச் சிறந்தது என்ற தவறான ஒப்பீடுகள் அல்லது ஆதாரமற்ற தகவல்களை விளம்பரம் செய்யக் கூடாது.
இந்த வழிகாட்டுதல்கள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இதனை மீறுவோா் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.