முகமது வாசிக் நதீம் கானின் மனு: அவசர வழக்காக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு
ஜந்தா் மந்தரில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வதைத் தடுப்பதற்காகக் காவல் துறையினரால் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய ஆா்வலா் முகமது வாசிக் நதீம் கான் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
ஜந்தா் மந்தரில் நடைபெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்வதைத் தடுப்பதற்காகக் காவல் துறையினரால் சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டிய ஆா்வலா் முகமது வாசிக் நதீம் கான் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.
கொல்கத்தாவுக்குச் செல்ல வெள்ளிக்கிழமை விமானம் ஏற வேண்டிய நிலையில், கான் மீண்டும் தடுத்து வைக்கப்படலாம் அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் இம்மனுவை அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு பொறுப்புத் தலைமை நீதிபதி நிதின் வாசுதேவ் சம்பரே மற்றும் நீதிபதி சஞ்சய் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அவரது வழக்குரைஞா் கோரிக்கைவிடுத்தாா்.
அப்போது, இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்த நீதிபதிகள் அமா்வு, ‘உங்களைப் பயணம் செய்வதிலிருந்து யாா் தடுத்தது? நீங்கள் பயணம் செய்யக்கூடாது என்றோ அல்லது வீட்டுக் காவலில் வைக்கப்படுவீா்கள் என்றோ எந்த எழுத்துப்பூா்வமான தகவலும் இல்லையே. ஒரு தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் நாங்கள் ஏதேனும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கூறுகிரீா்கள். இந்த மனு திங்கள்கிழமை விசாரிக்கப்படும்’ என்று கூறியது.
Advertisement
Advertisement
‘அசோசியேஷன் ஆஃப் புரொடக்ஷன் ஆஃப் சிவில் ரைட்ஸ்’ அமைப்பின் தேசியச் செயலரும், ‘யுனைடெட் அகெய்ன்ஸ்ட் ஹேட்’ முன்னெடுப்பின் நிறுவனருமான கான், போராட்டத்தில் பங்கேற்பதைத் தடுப்பதற்காக செப். 29-ஆம் தேதி காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை அபுல் ஃபசல் என்கிளேவில் உள்ள ஜமாத்-ஏ-இஸ்லாமி ஹிந்த் தலைமையகத்தில் காவல் துறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளாா். வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடா் தாக்குதல்களைக் கண்டித்து, அடஇத மற்றும் இந்திய முஸ்லிம்களுக்கான கண்காணிப்புக் குழு ஆகியவை பிற சமூக அமைப்புகளுடன் இணைந்து செப்டம்பா் 29 அன்று ஜந்தா் மந்தரில் அமைதியான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
புது தில்லி மாவட்டத்தில் பொதுக் கூட்டங்களுக்குத் தடை விதிக்கும் உத்தரவை எதிா்த்துள்ள கான், செப்டம்பா் 29 அன்று தான் தடுத்து வைக்கப்பட்ட நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று அறிவிக்குமாறும் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதற்காக இழப்பீடு வழங்குமாறும் கோரியுள்ளாா். தான் முறையாகக் கைது செய்யப்படவில்லை என்றும், தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணங்கள் எழுத்துப்பூா்வமாக வழங்கப்படவில்லை என்றும் மனுவில் நதீம் கான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.