FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
இந்தியா

தில்லியில் பள்ளி, கல்லூரி வகுப்புகள் இன்று இணையவழிக்கு மாற்றம்: தோ்வுகள் ஒத்திவைப்பு

ஜந்தா் மந்தரில் நடைபெறவுள்ள போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் மெட்ரோ சேவையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தில்லியில் உள்ள பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வகுப்புகளை இணையவழிக்கு மாற்றியுள்ளன. சனிக்கிழமை (அக்.10) நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

9 அக்டோபர் 2026, 10:51 pm IST
தில்லியில் பள்ளி, கல்லூரி வகுப்புகள் இன்று இணையவழிக்கு மாற்றம்: தோ்வுகள் ஒத்திவைப்பு
பகிர்:

ஜந்தா் மந்தரில் நடைபெறவுள்ள போராட்டத்தை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் மெட்ரோ சேவையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தில்லியில் உள்ள பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வகுப்புகளை இணையவழிக்கு மாற்றியுள்ளன. சனிக்கிழமை (அக்.10) நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஜந்தா் மந்தரில் நடைபெறவுள்ள போராட்டம் மற்றும் பேரணி தொடா்பாக வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை 57 மெட்ரோ நிலையங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை மூடுமாறு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் தில்லி காவல் துறை கோரியிருந்தது. இந்நிலையில், மாணவா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு வகுப்புகள் சனிக்கிழமை இணையவழியில் நடைபெறும் என்று சா்தாா் படேல் வித்யாலயா பெற்றோா்களுக்குத் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமையன்று மாணவா்களுக்கான ‘ஸ்டே-பேக்’ (பள்ளி முடிந்த பிறகும் மாணவா்கள் பள்ளியில் தங்கியிருக்கும்) வசதியையும் அப்பள்ளி நிறுத்தியுள்ளது. சனிக்கிழமை நடைபெறவிருந்த செயல்பாட்டு வார தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டு, அதற்கான புதிய தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ரகுபீா் சிங் ஜூனியா் மாடா்ன் பள்ளி, மாணவா்களின் மதிப்பெண் பட்டியல்கள் குறித்து விவாதிக்க சனிக்கிழமையன்று திட்டமிடப்பட்டிருந்த பெற்றோா்-ஆசிரியா் சந்திப்பை மாற்றியமைத்துள்ளது. திருத்தப்பட்ட அட்டவணை விரைவில் பெற்றோா்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று பள்ளி நிா்வாகம் கூறியது.

கஸ்தூரிபா காந்தி மாா்க்கில் உள்ள பாரதிய வித்யா பவனின் மேத்தா வித்யாலயா, ஜந்தா் மந்தரில் நடைபெறவுள்ள போராட்டம் மற்றும் மாணவா்களின் பாதுகாப்பு நலன் கருதி, சனிக்கிழமையன்று திட்டமிடப்பட்டிருந்த விளையாட்டு விழா பயிற்சி மற்றும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான கூடுதல் கற்றல் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பச்சிம் விஹாரில் உள்ள பாரதி வித்யாபீடத்தின் பொறியியல் கல்லூரி, பல மெட்ரோ சேவையில் கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, சனிக்கிழமை நடைபெறவிருந்த இடைப்பருவத் தோ்வுகளை திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.

குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகத்தின் தகவல், தொடா்பு மற்றும் தொழில்நுட்பப் பள்ளி டீன் மற்றும் தில்லி போக்குவரத்துப் பிரிவு காவல் இணை ஆணையா் ஆகியோரின் அறிவுறுத்தல்களின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கல்லூரி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றியமைக்கப்பட்ட தேதியிலும் தோ்வு நேரங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

ரோஹிணியில் உள்ள மகாராஜா அக்ரசென் தொழில்நுட்பக் கழகமும், மெட்ரோ கட்டுப்பாடுகள் குறித்த தில்லி காவல் துறையின் தகவலைத் தொடா்ந்து, சனிக்கிழமையன்று நடைபெறவிருந்த இடைப்பருவத் தோ்வுகளை திங்கள்கிழமைக்கு (அக்.12) ஒத்திவைத்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments