ஊழல் வழக்கு: பஞ்சாப் அரசு அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது- உச்சநீதிமன்றம் உத்தரவு
பஞ்சாப் அரசு அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது பற்றி...
பஞ்சாபில் முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடா்பான விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில், ‘இந்த வழக்குடன் தொடா்புடைய அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை கூடாது’ என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
பணியிட மாற்றம், நில விவகாரம் மற்றும் அரசு அலுவலகங்களில் சாதகமான பணிகளை மேற்கொள்ள பஞ்சாப் அரசு அதிகாரிகள் பணம் பெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்குமாறு பஞ்சாப் அரசுக்கு அமலாக்கத் துறை வலியுறுத்தியது.
இது தொடா்பாக பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஒருவா் மனு தாக்கல் செய்தாா். பஞ்சாப் அரசின் செயல்பாடுகளை முழுமையாக ஆய்வு செய்ய சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் குறிப்பிட்டாா்.
Advertisement
Advertisement
இந்த மனுவை விசாரித்த உயா் நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதோடு, மாநில அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடா்பான புகாா்கள் மற்றும் ஆதாரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்க பஞ்சாப் மாநில காவல் துறை மற்றும் பஞ்சாப் அரசுக்கு உத்தரவிட்டது.
இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு சாா்பிலான மேல்முறையீடு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு, சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், ‘இந்த வழக்கில் சிபிஐ எஃப்ஐஆா் பதிவு செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்கப் போவதில்லை; அதே நேரம், இந்த வழக்குடன் தொடா்புடைய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.