FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஜந்தர் மந்தருக்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட ராம்லீலா! எவ்வளவு வாடகை? முழு விவரம்

ஜந்தர் மந்தருக்கு மாற்றாக அறிவிக்கப்பட்ட ராம்லீலாவுக்கு எவ்வளவு வாடகை? உள்ளிட்ட முழு விவரம்

13 அக்டோபர் 2026, 3:56 pm IST
ராம்லீலா வளாகம்
பகிர்:

பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ள ஜந்தர் மந்தர் இனி அங்கீகரிக்கப்பட்ட போராட்டக் களமாக இருக்காது என்று தில்லி காவல் துறை அறிவித்துவிட்டது. அதற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் ராம்லீலா பற்றிய தகவல்களை மக்கள் இப்போதே தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.

புது தில்லி மாவட்டத்துக்கு வெளியே 3 புதிய இடங்களை போராட்டங்களுக்கான புதிய இடங்களாகக் காவல் துறை அறிவித்துள்ளது. ராம்லீலா மைதானம், புராரி மைதானம், சிபிடி மைதானம் ஆகியவை புதிய போராட்டக் களங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜந்தர் மந்தரிலிருந்து ராம்லீலா வளாகம், 4 கி.மீ தொலைவில் உள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட 3 போராட்டக் களங்களில் ஒன்றான ராம்லீலா வளாகத்தில் போராட்டம் நடத்துவது அவ்வளவு எளிதல்ல, வாடகை, முன்பதிவு எல்லாம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதுபோலத்தான்.

Advertisement

Advertisement

தில்லி மாநகராட்சியின் தோட்டக்கலைத் துறை மூலமாக இந்த வளாகம் முன்பதிவு செய்யப்படுகிறது. அந்த இணையதளத்தில் சென்று பார்த்தால் இரண்டரை மாதங்களுக்கு அதாவது டிசம்பர் வரை இந்த வளாகம் எந்தத் தேதியும் காலியாக இல்லை. மேலும், ஒரு நாள் முன்பதிவுக்கான கட்டணம் ரூ. 1 லட்சத்துக்கும் மேல்.

ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முன்பதிவு, வாடகை என்பது கிடையாது.

பிடிஐ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது என்னவென்றால், இப்போதைக்கு 12 ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரம் பேர் அமரலாம். ஆனால், இன்று முன்பதிவு செய்யச் சென்றால் டிசம்பர் 29,30, 91ஆம் தேதிதான் காலியாக இருக்கிறதாம். இப்பகுதி தசரா, தீபாவளி என பல விழாக்கள், அரசு நிகழ்ச்சிகள், தனியார் நிகழ்ச்சிகளுக்காக தொடர்ந்து முன்பதிவு செய்யப்படுமாம்.

ஒரு நாள் வாடகை ரூ.50 ஆயிரமாம், பாதுகாப்பு வைப்புத் தொகை ரூ.55 ஆயிரமாம். அதாவது ஒரு நாள் வாடகைக்கு முன்பதிவு செய்ய வரி உள்பட ரூ.1.21 லட்சம். இது இன்றைய கணக்கு.

சிறிய அளவில் போராட்டங்கள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்காக வளாகத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே தற்போதைக்கு இலவசமாக உள்ளது. அதிலும் 150 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும். இங்கு போராட்டம் நடத்த மாநகராட்சி ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு தில்லி காவல் துறையின் தடையில்லா சான்று பெறுவது கட்டாயமாம்.

வரலாற்றில் ராம்லீலா வளாகம்

19ஆம் நூற்றாண்டில் தசரா பண்டிகை இங்குதான் கொண்டாடப்படும்.

1956 மற்றும் 1957ஆம் ஆண்டுகளில் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு, இங்குதான் மக்களிடையே உரையாற்றுவார்.

இந்தியாவுக்கு வருகை தந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் நினைவாக இங்கு 1962ஆம் ஆண்டு நிரந்தரமாக மேடை உருவாக்கப்பட்டது.

பாகிஸ்தானுடனான போரில் வெற்றி பெற்ற பிறகு 1971ஆம் ஆண்டு இங்குதான் இந்திரா காந்தி உரையாற்றினார்.

1975ஆம் ஆண்டு அவசரநிலை பிரகடனத்தின்போது ஜெயபிரகாஷ் நாராயண், அடல் பிகாரி வாஜ்பாயி இருவரும் இந்த வளாகத்தில்தான் உரை நிகழ்த்தினர்.

2011ஆம் ஆண்டு அரவிந்த் கேஜரிவால், சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே 12 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இங்குதான் மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments