கேரள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுக்குத் தடை! பாஜக ஆதரவு, சிபிஎம் கண்டனம்!
கேரள ஆளுநர் மாளிகையின் சமையலறையில் அசைவ உணவு சமைக்கப்படக் கூடாது எனும் அறிவுறுத்தலுக்கு சிபிஎம் கண்டனம்...
கேரள ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துர் மக்கள் மாளிகையின் சமையலறையில் அசைவ உணவு சமைக்கப்படக் கூடாது என அறிவுறுத்தியதற்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது.
கேரளத்தின் புதிய ஆளுநராக ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஓம் பிரகாஷ் மாத்துர் நேற்று (அக். 24) பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து, பதவியேற்ற சில மணிநேரங்களிலேயே ஆளுநரின் மக்கள் மாளிகையின் சமையலறையில் மீன் மற்றும் இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகள் சமைக்கப்படக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரள ஆளுநரின் இந்த நடவடிக்கை அம்மாநிலத்தின் உணவு கலாசாரத்தின் மீதான புரிதலின்மை என்றும், ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் கேரள ஊழியர்களின் உணவு சுதந்திரத்தின் மீதான அத்துமீறல் என்றும் காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி. வேணுகோபால் கூறியிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துருக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களின் இல்லங்களில் தங்களுக்கான உணவு ஏற்பாடுகளைத் தீர்மானிக்கும் உரிமை உண்டு என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீன் கண்டேல்வால் இன்று (அக். 24) ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறுகையில்,
“ஒவ்வொரு தனிநபருக்கும் தங்களின் இல்லங்களின் தங்களுக்கான உணவு ஏற்பாடுகளைத் தீர்மானிக்கும் உரிமை உண்டு. மக்கள் மாளிகை என்பது ஆளுநருக்கான தங்குமிடம். அதனால், அங்குள்ள உணவு ஏற்பாடுகளைத் தீர்மானிக்கும் உரிமை அவருக்கு உண்டு. காங்கிரஸ் கட்சியிடம் உண்மையான பிரச்னைகள் எதுவும் இல்லாததால், இதனை ஒரு பிரச்னையாகக் கருதுகிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
ஆனால், ஆளுநர் ஓம் பிரகாஷ் மாத்துரால் எப்படி மக்கள் மாளிகையின் பணியாளர்களிடம் சைவ உணவை மட்டும் உண்ணுமாறு கட்டளையிட முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் வி. சதாசிவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி, அவர் பேசுகையில்,
“கேரளம் நம் நாட்டின் பன்முக கலாசாரத் தன்மையை பிரதிபலிக்கும் மாநிலமாகத் திகழ்கிறது. மக்கள் மாளிகையில் சைவ உணவை மட்டுமே அனுமதிக்க கேரள ஆளுநர் உத்தரவு பிறப்பித்ததாகக் கேள்விப்பட்டேன்.
ஒவ்வொருவருக்கும் அவரவர் உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உண்டு. அப்படியிருக்கையில், ஆளுநர் தனது ஊழியர்களை சைவ உணவை மட்டுமே உண்ணுமாறு எப்படி உத்தரவிட முடியும்? இது ஒரு கொடூரமான செயல்” எனக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்.
The BJP has supported Kerala Governor Om Prakash Mathur's advice that non-vegetarian food should not be cooked in the kitchen of the People's House.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.