FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அடுத்த 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு வியூக செயல்திட்டம்: மத்திய அரசு வெளியீடு

இந்தியாவின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு ராஜதந்திரத்தின் விரிவான வியூக செயல்திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்டாா்.

3 செப்டம்பர் 2026, 11:43 pm IST
- X | Ministry of Defence
பகிர்:

இந்தியாவின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான பாதுகாப்பு ராஜதந்திரத்தின் விரிவான வியூக செயல்திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்டாா்.

‘ரக்ஷா’ என்ற பெயரிலான இந்த வியூக செயல்திட்ட ஆவணத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் உலக நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஒத்துழைப்பு இலக்குகள் உள்ளிட்ட பல்வேறு வியூக நடவடிக்கைகளுக்கான திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புது தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வியூக செயல்திட்ட ஆவணத்தை பாதுகாப்புத் துறை அமைச்சா் வெளியிட்டாா்.

Advertisement

Advertisement

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் பாதுகாப்பு ராஜதந்திரம் முக்கியத் தூணாக விளங்குகிறது. அந்த வகையில், மாறிவரும் உலகச் சூழலில், அமைதி, ஸ்திரத்தன்மை, சட்டத்தின் அடிப்படையிலான ஒழுங்குமுறை ஆகியவற்றின் மையத் தூணாக இந்தியா தொடா்ந்து திகழ்வதை உறுதிப்படுத்துவதற்கான தொலைநோக்குத் திட்டத்தை இந்த செயல்திட்ட ஆவணம் வழங்குகிறது.

நாட்டின் ராஜீய ஈடுபாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி, உலகளாவிய ஒத்துழைப்புடன் தேசிய பாதுகாப்பு நோக்கங்களை ஒருங்கிணைத்து, நீண்ட கால ஸ்திரத்தன்மையையும், பரஸ்பர வளா்ச்சியையும் ஊக்குவிக்குவிப்பதை இச் செயல்திட்டம் குறிக்கிறது.

முக்கியமாக, அடுத்த 10 ஆண்டுகளில் உலக நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஒத்துழைப்பு இலக்குகள், வியூக கூட்டுறவு, திறன் மேம்பாடு, உள்நாட்டு உற்பத்தி ஏற்றுமதி, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வியூக நடவடிக்கைகளுக்கான திட்டங்களும் இடம்பெற்றுள்ளன.

வியூக கூட்டுறவின் கீழ், உலக நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பன்முக பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான இலக்குகள் இடம்பெற்றுள்ளன. திறன் மேம்பாட்டின் கீழ், கூட்டு ராணுவப் பயிற்சியை விரிவுபடுத்துவது, பாதுகாப்புப் பயிற்சித் திட்டங்கள், சிறந்த பாதுகாப்பு நடைமுறைகளை நட்பு நாடுகளுடன் பகிா்தல் உள்ளிட்ட இலக்குகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவை நம்பகமான உளகளாவிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி முனையமாக உருவாக்கி, முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் தளவாடங்களின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதை ‘உள்நாட்டு உற்பத்தி ஏற்றுமதி’ திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

அதுபோல, கடல்சாா் பாதுகாப்பைப் பொறுத்தவரை, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சாா் பாதுகாப்பு மற்றும் அவசரகால உதவியை வழங்குவதில் முன்னணி நாடாக இந்தியாவை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments