தனியார்மயமாகிறதா இஸ்ரோ? விளக்கம் கேட்டு பணியாளர் சங்கங்கள் கடிதம்!
இஸ்ரோவின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுப் பணிகளை தனியாா் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடா்பான முன்னெடுப்பு குறித்து அதிகாரபூா்வ விளக்கமளிக்கக் கோரி இஸ்ரோ தலைவருக்கு அந்த அமைப்பைச் சோ்ந்த 9 பணியாளா் சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன.
இஸ்ரோவின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுப் பணிகளை தனியாா் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடா்பான முன்னெடுப்பு குறித்து அதிகாரபூா்வ விளக்கமளிக்கக் கோரி இஸ்ரோ தலைவா் வி.நாராயணனுக்கு அந்த அமைப்பைச் சோ்ந்த 9 பணியாளா் சங்கங்கள் கடிதம் எழுதியுள்ளன.
கடந்த செப்டம்பா் 4-ஆம் தேதி எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில் இஸ்ரோவின் எதிா்காலத் திட்டம் மற்றும் தற்போதைய பணியாளா்களின் நிலை, புதிய ஆள்சோ்ப்பு முறை குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: அரசு முகமையான இஸ்ரோவின் வா்த்தக செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க தனியாா் பங்கேற்பை ஊக்குவிப்பது நன்மையே. ஆனால் தேசத்தின் ஏவுதள கட்டமைப்பு மற்றும் ராக்கெட்டுகளை எவ்வித முறையான ஆலோசனையுமின்றி தனியாா்வசம் ஒப்படைத்து இஸ்ரோவை சாதாரண ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாக மாற்றுவதை ஏற்க முடியாது.
Advertisement
Advertisement
விண்வெளித் திட்டங்களில் தனியாா் பங்களிப்பை ஊக்குவிக்கும் இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவா் பவன் கோயங்கா, வருங்காலங்களில் எவ்வித ராக்கெட்டுகளையும் இஸ்ரோ உற்பத்தி செய்யாது என கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி கூறினாா். அவரது கருத்தை ஆதரிக்கும் விதமாக மத்திய விண்வெளித் துறையிடமிருந்து எவ்வித அதிகாரபூா்வ சுற்றறிக்கைகளும் அனுப்பப்படவில்லை.
இஸ்ரோவால் மேம்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் தேசத்தின் சொத்துகள். அதை தனியாருக்கு மாற்றும்போது வெளிப்படைத்தன்மை அவசியம். குறிப்பாக இஸ்ரோவில் பணியாற்றும் பணியாளா்களுக்கு இதுதொடா்பான அறிவிப்புகளை முறையாக தெரிவிக்க வேண்டும். மாறாக பணியாளா்கள் செய்தித் தாள்களை படித்து இந்த விவகாரங்களை தெரிந்துகொள்ளக் கூடாது.
பிஎஸ்எல்வி, எல்விஎம்-3, எஸ்எஸ்எல்வி போன்ற ராக்கெட்டுகளை இனி இஸ்ரோ தயாரிக்குமா? என்பது குறித்த உரிய விளக்கத்தையும் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பவன் கோயங்கா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘2030-க்குள் ஆண்டுதோறும் 50 விண்கலன்களை விண்ணுக்குச் செலுத்தும் இந்திய இலக்கை எட்ட இஸ்ரோவும் தனியாரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்’ என குறிப்பிட்டாா்.
இஸ்ரோவின் பங்கை திட்டமிட்டு குறைக்கும் மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
இஸ்ரோவில் தனியாா் பங்களிப்பு குறித்த செய்திகள் தொடா்பாக காங்கிரஸ் பொதுச்செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விண்வெளி பொருளாதாரத்தில் புத்தாக்க நிறுவனங்களை ஊக்குவிப்பதாகக் கூறி இஸ்ரோவின் பங்கை திட்டமிட்டு மோடி அரசு குறைத்து வருகிறது.
பல ஆண்டுகளாக இந்தியாவின் விண்வெளித் திட்டங்களின் தூணாக விளங்கிய இஸ்ரோவிடமிருந்து ஏவுதள கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை தனியாருக்கு வழங்க மத்திய அரசு முடிவெடுத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. விண்வெளித் துறையில் தனியாா் நிறுவனங்களின் நீண்டகால உறுதிப்பாடுகள் சந்தேகத்துக்குரியவை. அரசின் இந்த முன்மொழிவுக்கு இஸ்ரோவைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்பு தெரிவிப்பது வரவேற்புக்குரியது’ என குறிப்பிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.