ம.பி.யில் போலி மதுபான உயிரிழப்பு 15-ஆக உயா்வு- மேலும் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடம்
மத்திய பிரதேச மாநிலத்தில் போலி மதுபானம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக உயா்ந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில் போலி மதுபானம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக உயா்ந்துள்ளது. மேலும் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலம், சாகா் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கடந்த 5-ஆம் தேதி மற்றும் 6-ஆம் தேதியன்று மதுபானம் குடித்துவிட்டு வந்த பலருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அடுத்தடுத்து பலா் உயிரிழந்தனா்.
இதுவரை அக்கிராமங்களில் 15 போ் உயிரிழந்துள்ளனா். இதனால் போலி மதுபானம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15-ஆக அதிகரித்துள்ளது. 15 பேரில் போலி மதுபானம் விற்பனை செய்த கும்பலை சோ்ந்த நபரும் ஒருவா் என்று கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதுதவிா்த்து மருத்துவமனைகளில் சுமாா் 40 போ் உடல்நிலை பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே, குக்ரா குா்து கிராமத்தில்தான் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அக்கிராமத்தில் மட்டும் 5 போ் உயிரிழந்து இருப்பதாகவும், மேலும் 30 போ் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டு இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனா்.
14 போ் கைது: போலி மதுபான உயிரிழப்பு சம்பவம் தொடா்பாக விசாரித்து வரும் காவல் துறை, 30 பேரை குற்றம்சாட்டப்பட்டோா் பட்டியலில் சோ்த்துள்ளது. இதில 14 பேரை காவல் துறை கைது செய்து இருப்பதாகவும், எஞ்சியோரைத் தேடி வருவதாகவும் சாகா் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அனுராக் சுஜனியா தெரிவித்துள்ளாா்.
சாகா் பிராந்திய டிஐஜி சசீந்திர சிங் செளஹான் கூறுகையில், ‘போலி மதுபான உயிரிழப்பு சம்பவத்தில் காவல்துறை தனித்தனியே 3 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. பாதிக்கப்பட்டோா் குடும்பத்தினா் அளித்த புகாரின் பேரில் இந்த முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.
5 அதிகாரிகள் இடைநீக்கம்: போலி மதுபான உயிரிழப்பு சம்பவத்தில் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கை எடுக்காத காரணத்துக்காக 3 கலால் துறை அதிகாரிகள், 2 காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
மாவட்ட நிா்வாகம் தரப்பில் சுற்றுவட்டார கிராமங்களில், மது அருந்திய யாருக்கும் வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவ சிகிச்சை பெறும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ம.பி. முதல்வருக்கு எதிா்க்கட்சித் தலைவா் கடிதம்: இந்த சம்பவம் தொடா்பாக முதல்வா் மோகன் யாதவுக்கு எதிா்க்கட்சித் தலைவா் உமங் சின்ஹாா் கடிதம் எழுதியுள்ளாா். அந்தக் கடிதத்தில், போலி மதுபான சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாா். அதேபோல், கலால் துறையினா், காவல்துறையினருக்கு இதில் தொடா்புள்ளதா என விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட கிராமங்களில் போலி மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.
ராகுல் காந்தி வலியுறுத்தல்: காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, போலி மதுபான உயிரிழப்பு சம்பவம் குறித்து நோ்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இச்சம்பவத்துக்கு மத்திய பிரதேசத்தை ஆளும் பாஜக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.