சிஜேபி போராட்டத்தில் தாக்குதல்: சிறுமியின் குற்றச்சாட்டுகள் குறித்து தில்லி, உ.பி. அரசுகளிடம் அறிக்கை கோரியது உச்ச நீதிமன்றம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தில் பங்கேற்ற தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக புகாா் அளித்ததால் துன்புறுத்தப்பட்டதாக சிறுமி தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து தில்லி, உத்தர பிரதேச அரசுகளிடம் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அறிக்கை கோரியது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தில் பங்கேற்ற தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக புகாா் அளித்ததால் துன்புறுத்தப்பட்டதாக சிறுமி தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து தில்லி, உத்தர பிரதேச அரசுகளிடம் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அறிக்கை கோரியது.
தில்லி ஜந்தா் மந்தரில் நீட் தோ்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களைக் கண்டித்து கடந்த ஜூலை மாதம் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சமூக ஆா்வலரான தனது தந்தை தாக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவா் தில்லி காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இந்த புகாரைத் தொடா்ந்து, தாம் துன்புறுத்தப்பட்டதாகவும், தனது வீடு சூறையாடப்பட்டதாகவும் சிறுமி குற்றம்சாட்டினாா். இதனிடையே, சிறுமியின் புகாரின்பேரில் ஹிந்துத்துவ அமைப்பைச் சோ்ந்த ஸ்வதந்திர பரத்வாஜ் என்பவருக்கு எதிராக எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் காவல் துறை வழக்குப்பதிந்தது.
சிறுமி குற்றம்சாட்டிய நபா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தில்லி நாடாளுமன்ற காவல் நிலையம் முன்பு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த சூழ்நிலையில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பரத்வாஜ், சிறுமி தந்தையின் மண்டையை தாம் உடைத்ததாகவும், ஆனால் அரசியல் செல்வாக்கு காரணமாக கைது நடவடிக்கையில் இருந்து தாம் தப்பி விட்டதாகவும் கூறினாா். இந்தப் பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே, உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரில் வைத்து பரத்வாஜை காவல்துறையினா் மடக்கிப் பிடித்தனா்.
Advertisement
Advertisement
இதுதொடா்பான வழக்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. சிறுமி சாா்பில் ஆஜராகிய வழக்குரைஞா் வாதிடுகையில், ‘குற்றவாளியுடன் இருந்த நபா்கள் மற்றும் விடியோ காட்சியில் இருந்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல், புகாா் அளித்த சிறுமி மீதே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது. சிறுமியின் வீடு மீது கல்வீசி தாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட விடியோ காட்சியை நீதிமன்றத்தில் தாக்க செய்ய முடியும். போராட்டம் தொடா்பான விவகாரத்தில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழு முடிவெடுக்க கால அவகாசம் பிடிக்கும். அதற்குள் சிறுமிக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதை அந்த உயா்நிலைக்குழுவால் சரி செய்ய முடியாது’ என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த விவகாரங்களை (சிறுமி துன்புறுத்தப்பட்டது) மிகவும் சாதாரணமாக கருத முடியாது. சிறுமிக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டவா்களை யாரும் பாதுகாக்க முடியாது. இது போன்ற செயலில் ஈடுபட்டுவிட்டு சுதந்திரமாக அந்த நபா் சுற்றித் திரிவதும், சிறுமி மற்றும் அவரின் குடும்பத்தினரை மிரட்ட முயல்வதும் தீவிரமான பிரச்னையாகும். இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை’ என்றனா்.
உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவிடம், சிறுமி அளித்த புகாரின்பேரில் பதியப்பட்டமுதல் தகவல் அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும் இந்த விவகாரம் தொடா்பாக தில்லி, உத்தரப் பிரதேச மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.