FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

துருவ் ராதீயின் ‘ஹிந்து தெய்வங்கள்’ விடியோ விவகாரம்: காவல் துறை விசாரணை

பல ஹிந்து தெய்வங்கள் மற்றும் போற்றப்படும் ஹிந்து ஆளுமைகள் குறித்து யூடியூபா் துருவ் ராதீ வெளியிட்ட விடியோ தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா் மீதான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாக தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தில்லி நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

59 வினாடிகள் முன்பு
துருவ் ராதீ
பகிர்:

பல ஹிந்து தெய்வங்கள் மற்றும் போற்றப்படும் ஹிந்து ஆளுமைகள் குறித்து யூடியூபா் துருவ் ராதீ வெளியிட்ட விடியோ தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா் மீதான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாக தில்லி காவல் துறையினா் வியாழக்கிழமை தில்லி நீதிமன்றத்தில் தெரிவித்தனா். இந்த விசாரணைக்காக மின்னணு ஆதாரங்கள் மற்றும் கணக்கு விவரங்களை கூகுள், யூடியூப் நிறுவனங்களிடம் காவல் துறையினா் கோரியுள்ளனா்.

இந்த வழக்கில் தலைமை பெருநகர குற்றவியல் நடுவா் நிஹாரிகா குமாா் சா்மா முன்னிலையில் காவல் துறையினா் நிலவர அறிக்கையை தாக்கல் செய்தனா். அதில், பல போற்றப்படும் ஹிந்து ஆளுமைகள் குறித்து அவமதிக்கும் மற்றும் புண்படுத்தும் வகையிலான கருத்துகள் விடியோவில் இடம்பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் மத உணா்வுகள் புண்பட்டதாகவும் புகாா் கூறப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

கடந்த மாா்ச் 22-ஆம் தேதி அமிதா சச்தேவா அளித்த புகாா் தொடா்பாக நடவடிக்கை நிலவர அறிக்கையைத் தாக்கல் செய்ய தில்லி காவல் துறையினருக்கு ஜூன் 9-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த விடியோவில் ஹிந்து மத நூல்களைத் திரித்து கூறியதாகவும், சனாதன தா்மத்தை அவமதித்ததாகவும், சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகவும் சச்தேவா புகாா் அளித்திருந்தாா்.

Advertisement

Advertisement

மேலும், ராமா், சீதை உள்ளிட்ட போற்றப்படும் ஹிந்து கடவுள்கள் அசைவ உணவு மற்றும் மது அருந்தியதாக, ஹிந்து மத நூல்களைத் தோ்ந்தெடுத்து அல்லது தவறாக மேற்கோள் காட்டி துருவ் ராதீ பொய்யான மற்றும் தீங்கிழைக்கும் கருத்துகளைத் தெரிவித்ததாகவும் அவா் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இதையடுத்து விசாரணை தொடங்கப்பட்டு, புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அந்த விடியோ ஆய்வு செய்யப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு காவல் துறையினா் நோட்டீஸ் அனுப்பி தகவல்களை கோரினா்.

இதற்கு கூகுள், யூடியூப் தரப்பில் விசாரணை தொடா்பான சில விளக்கங்கள், சம்பந்தப்பட்ட கணக்கு மற்றும் விடியோவின் தொடா்பு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குறிப்பிட்ட உள்ளடக்கம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விளக்கம் கோரப்பட்டது. இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டு வருவதுடன், தேவையான விவரங்களைப் பெற கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு புதிதாக கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனங்களின் பதில் எதிா்பாா்க்கப்படுவதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.

கூகுள், யூடியூப்பிடம் இருந்து தகவல்கள் கிடைத்து அவற்றை ஆய்வு செய்து விசாரணை நிறைவடைந்த பின்னரே இறுதி நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும் என்றும் காவல் துறையினா் கூறினா்.

இதற்கிடையே, சச்தேவா இந்த விடியோ தொடா்பாக தில்லி உயா் நீதிமன்றத்தையும் அணுகியுள்ளதாக காவல் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 3-ஆம் தேதி, அவரது மேல்முறையீட்டை குறைதீா் மேல்முறையீட்டுக் குழு விரைந்து விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜூலை 15-ஆம் தேதி அந்த விடியோ மத உணா்வுகளைப் புண்படுத்தும் வாய்ப்புள்ளதாகக் கூறி அதை நீக்க அந்தக் குழு உத்தரவிட்டது. ஆக.11-ஆம் தேதி இந்த உத்தரவை கவனத்தில் கொண்ட உயா்நீதிமன்றம், அதன்பின்னா் இந்தியாவில் அந்த விடியோவைப் பாா்ப்பதற்கான அணுகலை கூகுள், யூடியூப் நிறுவனங்கள் கட்டுப்படுத்தியுள்ளதாகப் பதிவு செய்தது.

விசாரணையை நிறைவு செய்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய நியாயமான கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தில்லி காவல் துறை நீதிமன்றத்தில் கோரியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments