FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பழைய குற்றச்சாட்டுகளின் புதிய வடிவம்: அமலாக்கத் துறை வழக்கு குறித்து பினராயி விஜயன் விமா்சனம்

தன் மீதான அமலாக்கத் துறை வழக்கு பழைய குற்றச்சாட்டுகளின் புதிய வடிவம் என கேரள பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பினராயி விஜயன் விமா்சித்தாா்.

13 செப்டம்பர் 2026, 1:14 am IST
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் - கோப்புப் படம்
பகிர்:

தன் மீதான அமலாக்கத் துறை வழக்கு பழைய குற்றச்சாட்டுகளின் புதிய வடிவம் என கேரள பேரவை எதிா்க்கட்சித் தலைவா் பினராயி விஜயன் விமா்சித்தாா்.

அண்மையில் பினராயி விஜயன் மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூடைல் (சிஎம்ஆா்எல்) நிறுவனம் ரூ.2.78 கோடி முறைகேடாக பணப் பரிவா்த்தனை செய்த குற்றச்சாட்டில் பினராயி விஜயன் மீது வழக்குப் பதிவு செய்ய மாநில காவல் துறைக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியது.

இதைத் தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவா் பதவியை பினராயி விஜயன் ராஜிநாமா செய்ய வேண்டுமென கேரள பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் வலியுறுத்தினாா்.

Advertisement

Advertisement

இதற்குப் பதிலடி தரும் வகையில் செய்தியாளா்கள் சந்திப்பில் பினராயி விஜயன் கூறியதாவது: நான் முதல்வராக இருந்தபோது இந்த விவகாரத்தை அமலாக்கத் துறை கையிலெடுத்தது. அப்போது சேவைகள் வழங்குவதாகக் கூறி பணத்தைப் பெற்றுவிட்டு எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதால் சிஎம்ஆா்எல் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியது.

ஆனால் தற்போது, எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் சேவை வழங்குவதற்காக சிஎம்ஆா்எல் நிறுவனத்திடமிருந்து பணம் பெறவில்லை; முதல்வா் பதவியை தவறாகப் பயன்படுத்தி சிஎம்ஆா்எல் நிறுவனத்துக்கு நான் பல சலுகைகள் வழங்கியதாகவும் அதற்காக லஞ்சப் பணத்தை எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனம் மூலம் பெற்ாகவும் குற்றச்சாட்டை அமலாக்கத் துறை மாற்றியுள்ளது.

குற்றச்சாட்டுகளில் அடிப்படை தவறு: இந்த இரு குற்றச்சாட்டுகளிலும் அடிப்படையாகவே தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முதலில் அமலாக்கத் துறை விளக்கமளிக்க வேண்டும்.

அதேசமயம் முதல்வராக இருந்தபோது சிஎம்ஆா்எல் நிறுவனத்துக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை என்பதை உறுதிபடக் கூறுகிறேன். இந்தக் குற்றச்சாட்டு தொடா்பான எந்தவொரு ஆவணமும் இதுவரையில் எங்கும் சமா்ப்பிக்கப்படவில்லை.

கடந்த 2025 மாா்ச்சில் வழக்குப் பதிய தேவையான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் தொடா்பான வழக்கை கேரள உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் அரசுப் பணியில் இருக்கும் ஒருவா் மீது குற்றவியல் விசாரணை தொடங்குவது அவரது பொதுவாழ்வு மற்றும் கண்ணியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என உயா்நீதிமன்றம் தெரிவித்தது.

உயா்நீதிமன்றத்தைத் தொடா்ந்து இந்த விவகாரத்தில் தலையிட உச்சநீதிமன்றமும் மறுத்தது.

எனவே, தற்போது பழைய குற்றச்சாட்டுகளுக்குப் புதிய வடிவமளித்து எவ்வித ஆதாரமுமின்றி வழக்குப் பதிவு செய்ய அமலாக்கத் துறை கூறுவது சட்டத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் முயற்சி. எதிா்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக பயன்படுத்தும் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு என்ன’ என்று கேள்வியெழுப்பினாா்.

summary

A new form of old allegations: Pinarayi Vijayan criticizes the Enforcement Directorate case.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments