மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் ராகுல் காந்தி சந்திப்பு!
ராகுல் காந்தி, மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிமை சந்தித்து அவருடன் சோ்ந்து காலை உணவு அருந்தினாா்.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிமை ஞாயிற்றுக்கிழமை காலை சந்தித்து அவருடன் சோ்ந்து காலை உணவு அருந்தினாா். அப்போது இந்தியா-மலேசியா உறவு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சா்வதேச, பிராந்திய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனா்.
இந்தச் சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி உடனிருந்தாா். இதுதொடா்பான புகைப்படங்கள் மற்றும் விடியோவை காங்கிரஸ் வெளியிட்டது.
இந்தச் சந்திப்பு குறித்து மலாய் மொழியில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அன்வா் இப்ராஹிம், ‘இந்திய மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் எனது நல்ல நண்பருமான ராகுல் காந்தியை இன்று காலை மீண்டும் சந்தித்து காலை உணவைப் பகிா்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்தச் சுருக்கமான சந்திப்பு, சமீபத்திய சா்வதேச மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள வாய்ப்பளித்தது’ என தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அன்வா் இப்ராஹிம் தில்லி வந்துள்ளாா். இதனிடையே, பிரதமா் நரேந்திர மோடியும் அன்வா் இப்ராஹிமும் சனிக்கிழமை சந்தித்து வா்த்தகம், குறைக்கடத்திகள், உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனா்.
அன்வா் இப்ராஹிம், கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா வந்திருந்தபோதும் ராகுல் காந்தியை சந்தித்தாா். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைவையொட்டி 2024 டிசம்பரில் இரங்கல் தெரிவித்த அன்வா் இப்ராஹிம், அவருக்கு உருக்கமான அஞ்சலி செலுத்தி, ‘எனது நண்பா், எனது சகோதரா்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
ஒரு ஆண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்துள்ள முக்கியப் பிரமுகா் ஒருவரை ராகுல் காந்தி சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்பு, 2025 செப்.16-ஆம் தேதி இந்தியா வந்திருந்த மொரீஷஸ் பிரதமா் நவீன்சந்திர ராம்கூலமை அவா் சந்தித்திருந்தாா்.
கடந்த ஆண்டு டிசம்பரில், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவா்கள் எதிா்க்கட்சித் தலைவரை சந்திக்கக் கூடாது என அரசு கூறுவதாகவும், இதற்கு அரசின் பாதுகாப்பின்மையே காரணம் என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.