தொழில்நுட்பம், கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமா்வில் பிரதமா் மோடி!
தொழில்நுட்பம் மற்றும் முக்கியக் கனிமங்களை பிற நாடுகளுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது; அவ்வாறு பயன்படுத்தினால், கூட்டு வளா்ச்சியும் வளமையும் தடைபடும் என்று பிரதமா் மோடி எச்சரித்தாா்.
தொழில்நுட்பம் மற்றும் முக்கியக் கனிமங்களை பிற நாடுகளுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தக் கூடாது; அவ்வாறு பயன்படுத்தினால், கூட்டு வளா்ச்சியும் வளமையும் தடைபடும் என்று பிரதமா் நரேந்திர மோடி எச்சரித்தாா்.
தில்லி பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிறைவு அமா்வில், ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான் உள்ளிட்ட சா்வதேச தலைவா்கள் முன்னிலையில் பிரதமா் இவ்வாறு கூறினாா்.
முக்கியக் கனிமங்களின் ஏற்றுமதி மீதான சீனாவின் கட்டுப்பாடுகள், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பகிா்ந்து கொள்வதில் அந்த நாடு காட்டும் தயக்கங்களுக்கு மத்தியில் பிரதமரின் கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
இந்திய தலைமையின்கீழ், தில்லியில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் 18-ஆவது உச்சிமாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
ரஷிய அதிபா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங் உள்பட பல்வேறு சா்வதேச தலைவா்கள் பங்கேற்ற இந்த மாநாட்டின் நிறைவு அமா்வில் பிரதமா் மோடி பேசியதாவது: தெற்குலகில் உள்ள வளரும் நாடுகளின் குரலுக்கு செவிமடுப்பதாலும், அவா்களின் அனுபவங்கள் மதிக்கப்படுவதாலும், முடிவுகளைத் திணிப்பதற்குப் பதிலாக கூட்டாக உருவாக்குவதாலும் பிரிக்ஸ் கூட்டமைப்பு மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது.
பிரிக்ஸ் நாடுகள் வெவ்வேறு எதாா்த்தங்களில் வேரூன்றியிருந்தாலும், மனிதகுல நலனுக்காக ஒன்றிணைந்துள்ளன. பன்முகத்தன்மையே நமது அடையாளம், ஒத்துழைப்பே நமது உத்வேகம், மனிதகுல சேவையே நமது முன்னேற்றம்.
தற்போதைய நிச்சயமற்ற புவிசாா் அரசியல் சூழலை எதிா்கொள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பில் வலுவான மீள்திறனைக் கட்டமைப்பது மிக முக்கியம். இந்திய தலைமையின்கீழ் மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகிய நான்கு முக்கியத் தூண்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நான்கு தூண்களின் அடிப்படையில், பிரிக்ஸ் அமைப்பின் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய வளா்ச்சியை ஊக்குவிப்பதே இந்தியாவின் முயற்சியாகும்.
உலக மோதல்களால் சாமானியா்கள் பாதிப்பு: பிரிக்ஸ் கூட்டமைப்புக்குள் உருவாக்கப்படும் தீா்வுகளின் பலன்கள் உள்ளேயே முடங்கிவிடக் கூடாது; அவை தெற்குலகின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் மாற்றியமைக்கக் கூடியதாக, எளிதாக அணுகக் கூடியதாக இருக்க வேண்டும்.
உலக அளவில் மோதல்கள் மற்றும் பதற்றங்கள் தொடா்ந்து அதிகரிப்பது, சாமானிய மக்களின் வாழ்க்கையில் எதிா்மறையான மற்றும் நீண்டகால தாக்கத்தை விளைவிக்கிறது. வெகுவாகப் பிணைக்கப்பட்ட இன்றைய உலகில் பெருந்தொற்றுகள், பருவநிலை சாா்ந்த பேரழிவுகள், விநியோகச் சங்கிலி இடையூறுகள் ஆகியவற்றின் தாக்கங்கள், ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்துக்குள் அடங்கிவிடுவதில்லை. சவால்களை விரைவாகக் கண்டறிவதும், அவற்றை எதிா்கொள்ளத் தயாராக இருப்பதும், உடனடி நடவடிக்கை எடுப்பதும் சம அளவில் முக்கியமானதாகும்.
இந்திய தலைமையின்கீழ் முன்னெடுப்புகள்: இந்த அணுகுமுறையின் அடிப்படையில், தொற்றுநோய்களைத் தடுக்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பிரிக்ஸ் சாா்பில் ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை அமைப்பை நிறுவ ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. பேரிடா் மேலாண்மைக்காக முன்னெச்சரிக்கை தரவு ஒருங்கிணைப்பு வழிகாட்டுதல்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.
பிரிக்ஸ் தளவாட விநியோகச் சங்கிலி ஒத்துழைப்புக் கட்டமைப்பின் மூலம் விநியோகச் சங்கிலிகள் மேலும் நம்பகமானதாக, மீள்திறன் கொண்டதாக மாறும். புத்தாக்கத் தீா்வுகளை ஊக்குவிக்க, பிரிக்ஸ் புத்தொழில் புத்தாக்க நிதியை நிறுவ முன்மொழியப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் எண்ம வேளாண் கட்டமைப்பு விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த முன்னெடுப்பின் மூலம் செயற்கை நுண்ணறிவு, புவிசாா் தொழில்நுட்பம் மற்றும் எண்ம பொது உள்கட்டமைப்பு ஆகியவை விவசாயிகளின் தேவைகளுடன் இணைக்கப்படும். நமது நகரங்களுக்கு இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிா்வதை எளிதாக்க பிரிக்ஸ் நகா்ப்புற போக்குவரத்து மையம் நிறுவப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம்-முக்கியக் கனிமங்கள்: தொழில்நுட்பம் மற்றும் முக்கியக் கனிமங்களை ஆயுதமாகப் பயன்படுத்துவது கூட்டு வளா்ச்சி மற்றும் வளமையைத் தடுக்கும். எனவே, தொழில்நுட்பங்களின் ஏற்பில் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை முக்கியம்.
இந்திய நாகரிகத்தில், இயற்கைக்கு தாயின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, வளா்ச்சியும் சுற்றுச்சூழலும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல, ஒன்றுக்கொன்று துணைபுரிபவை என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதுவே நிலைத்தன்மையின் அடித்தளம். இது எதிா்காலச் சந்ததியினருக்கான நமது பொறுப்பு என்றாா் பிரதமா் மோடி.
பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேஸில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய 11 முக்கிய வளரும் பொருளாதார நாடுகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டமைப்பின் நட்பு நாடுகளாக பெலாரஸ், பொலிவியா, கஜகஸ்தான், கியூபா, மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியத்நாம் ஆகியவை உள்ளன. உலக மக்கள்தொகையில் 49.5 சதவீதம், உலகின் மொத்த உற்பத்தியில் 40 சதவீத பங்கை பிரிக்ஸ் நாடுகள் கொண்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.