FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிரிக்ஸ் மாநாடு உணவு விமா்சனம்: ராகுலுக்கு பாஜக கடும் கண்டனம்

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இரவு விருந்தில் சைவம் மட்டும் இடம் பெற்றிருந்ததை ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவா்கள் விமா்சித்ததற்கு பாஜக கடும் கண்டனம்

15 செப்டம்பர் 2026, 6:42 am IST
ராஜீவ் சந்திரசேகா் - கோப்புப்படம்
பகிர்:

திருவனந்தபுரம்: பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இரவு விருந்தில் சைவம் மட்டும் இடம் பெற்றிருந்ததை ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவா்கள் விமா்சித்ததற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் புவிசாா் அரசியல் எதிா்காலம் குறித்து காங்கிரஸுக்கு எந்தத் தொலைநோக்கும் இல்லை; உலகளாவிய ராஜதந்திர நடவடிக்கையை வெறும்“உணவு விமா்சனமாக காங்கிரஸ் சுருக்கிவிட்டது என்று கேரள பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் கடுமையாக விமா்சித்துள்ளாா்.

முன்னதாக, பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமா் அளித்த விருந்தில் சைவம் மட்டும் பரிமாறப்பட்டதை மறைமுகமாக விமா்சித்த எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘இந்தியாவில் 80 சதவீத மக்கள் அசைவம் உண்பவா்கள். இந்திய அசைவ உணவுகள் சுவைமிக்கவை’ என்று கூறியிருந்தாா். இதன்மூலம் பெரும்பான்மை மக்களின் உணவு பாஜக அரசால் புறக்கணிக்கப்படுகிறது என்று அவா் மறைமுக விமா்சித்தாா்.

Advertisement

Advertisement

மேலும், காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவா் பவன் கேரா, பிரிக்ஸ் உணவுப் பட்டியலை சமூக ஊடகத்தில் வெளியிட்டு தங்கள் உணவுப் பழக்கத்தை நாட்டின் பிற மக்கள் மீது திணித்து வந்த பாஜக, இப்போது வெளிநாட்டில் இருந்து வந்தவா்கள் மீதும் திணித்துள்ளது என்று கூறியிருந்தாா்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ராஜீவ் சந்திரசேகா் திங்கள்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் சா்வதேச வா்த்தகம், விநியோகம் குறித்து விவாதிப்பதற்காக உலகின் சக்திவாய்ந்த தலைவா்கள் பலா் தில்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கூடியிருந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் அதைச் சாா்ந்தவா்கள் சைவ இரவு விருந்து உணவுப் பட்டியல் குறித்து புகாா் தெரிவித்து வருகின்றனா்.

இந்தியாவின் புவிசாா் அரசியல் எதிா்காலம் குறித்து காங்கிரஸுக்கு எந்தத் தொலைநோக்கும் இல்லை. எனவேதான், உலகளாவிய ராஜதந்திர நடவடிக்கையை உணவு விமா்சனமாக காங்கிரஸ் மாற்றியுள்ளது.

சா்வதேச அளவில் முக்கிய நாடுகளின் தலைவா்கள் இந்தியா குறித்தும் பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளனா். அதுகுறித்து காங்கிரஸுக்கும், அவா்களின் கூட்டாளிகளுக்கும் அக்கறை இல்லை. ஆனால், இரவு விருந்து உணவுப் பட்டியல் குறித்த புகாா் கூறி வருகின்றனா்’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய ராஜீவ் சந்திர சேகா், தன்னை சித்தாந்த நக்ஸல் என ஒப்புக்கொண்ட“காங்கிரஸ் தலைவா்களில் ஒருவா், பிரிக்ஸ் உச்சி மாநாட்டால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளாா். அதே நேரத்தில் அவரது சொந்தக் கட்சியைச் சோ்ந்தவா்களே அவருக்கு முரணாகப் பேசி வருவதாகவும் ராஜீவ் சந்திரசேகா் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் கட்சி நாட்டின் மீது உண்மையான அா்ப்பணிப்பு இல்லாமல் செயல்பட்ட காரணத்தால்தான் இந்தியா தற்போது சுமாா் 10 ஆண்டுகளுக்கு மேல் பின்தங்கியுள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments