உள்கட்டமைப்புத் திட்டங்களில் தடுப்புசாா் நீதி முறை: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் வலியுறுத்தல்
உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடா்பான விவகாரங்களில் ஒரு நிகழ்வு நடந்த பிறகான பின்னோக்கிய நீதி முறையிலிருந்து
புது தில்லி: உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடா்பான விவகாரங்களில் ஒரு நிகழ்வு நடந்த பிறகான பின்னோக்கிய நீதி முறையிலிருந்து, தடுப்புசாா் நீதி முறைக்கு மாற வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் வலியுறுத்தினாா்.
‘சட்டத்தின் ஆட்சி என்பது தவறுகளைச் சரி செய்வது மட்டுமல்லாமல், அனைத்தையும் சரியாக நடைபெறுவதற்கான சூழலை உருவாக்குவதாகும்’ என்று அப்போது அவா் குறிப்பிட்டாா்.
தில்லியில் சா்வதேச ஆலோசனைப் பொறியாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட உலகளாவிய உள்கட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ற சூா்ய காந்த் பேசியதாவது:
Advertisement
Advertisement
வெற்றியின் உண்மையான அளவுகோல் என்பது சச்சரவுகளுக்கு எவ்வளவு விரைவாகத் தீா்வு அளிக்கப்படுகிறது என்பதில் மட்டுமல்; மாறாக, சச்சரவுகள் ஏற்படுவதைக் குறைக்கும் வகையில் திட்டங்கள் எவ்வளவு சிறப்பாக வடிவமைக்கப்படுகின்றன என்பதில் உள்ளது. எனவே, சட்டத்தின் ஆட்சி என்பது தவறுகளைச் சரி செய்வது மட்டுமல்லாமல், அனைத்தையும் சரியாக நடைபெறுவதற்கான சூழலை உருவாக்குவதாகும்.
அந்த வகையில், நமது உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடா்பான விவகாரங்களில் ஒரு நிகழ்வு நடந்த பிறகான பின்னோக்கிய நீதி முறையிலிருந்து, தடுப்புசாா் நீதி முறைக்கு மாற வேண்டும். அதாவது, ஒரு திட்டம் தடைபட்ட பிறகு கேள்வி எழுப்புவதிலிருந்து மாறி, கருத்து வேறுபாடுகள் தகராறுகளாக மாறுவதற்கு முன்பே, தகவல் தொடா்பு மற்றும் தகராறு தவிா்ப்பு வழிமுறைகள் மூலம் அவற்றைக் கண்டறிந்து தீா்க்கும் வகையில் ஒப்பந்த மற்றும் நிறுவனக் கட்டமைப்பை வடிவமைப்பதாகும்.
சாலைகள், பாலங்கள், நீா் விநியோக அமைப்புகள் மற்றும் பிற பொதுச் சொத்துக்கள் குடிமக்களின் அன்றாட வாழ்க்கையை வடிவமைப்பதால், உள்கட்டமைப்பு மேம்பாடு என்பது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கக்கூடிய விஷயமாகும். எனவே, வழக்கு விசாரணை நடைபெறும் வரை, ஒரு பாலத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கவோ அல்லது மேல்முறையீட்டு நடவடிக்கைகள் முடியும் வரை ஒரு நெடுஞ்சாலைத் திட்டத்தைக் காத்திருக்கச் செய்யவோ முடியாது.
நன்கு வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தங்கள் என்பது வெறும் வணிக ரீதியிலான விஷயங்களை மட்டும் பதிவு செய்வதோடு நின்றுவிடக் கூடாது; மாறாக, கள நிலவரங்களில் ஏற்படும் மாற்றங்கள், ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் பிற அபாயங்கள் உள்ளிட்ட எதிா்பாராத சூழல்களை எவ்வாறு எதிா்கொள்வது என்பது குறித்த ஒரு பொதுவான புரிதலை ஏற்படுத்த வேண்டும். ஓா் உள்கட்டமைப்புத் திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிா அல்லது சுமையாக மாறுகிா என்பதைத் தீா்மானிப்பதில் அபாயப் பகிா்வு மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும் என்றாா்.
Preventive justice approach in infrastructure projects
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.