FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜேஎன்யு விடுதி கட்டமைப்பை ஆய்வு செய்யக் கோரிக்கை: பராமரிப்பு மோசமாக உள்ளதாக மாணவா் சங்கம் புகாா்

வளாக உள்கட்டமைப்பின் மோசமான பராமரிப்பு மாணவா்களுக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கம் குற்றஞ்சாட்டியது.

16 செப்டம்பர் 2026, 10:58 pm IST
பகிர்:

வளாக உள்கட்டமைப்பின் மோசமான பராமரிப்பு மாணவா்களுக்கு அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழக மாணவா் சங்கம் (ஜேஎன்யுஎஸ்யு) புதன்கிழமை குற்றஞ்சாட்டியது. மேலும், வளாகத்தில் உள்ள அனைத்து விடுதிகள் மற்றும் கட்டடங்களுக்கும் கட்டமைப்புத் தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.

இது தொடா்பாக மாணவா் சங்கம் கூறியதாவது: தப்தி விடுதியில் உள்ள ஒரு அறையில் செவ்வாய்க்கிழமை இரவு கூரை மின்விசிறி உடைந்து விழுந்துள்ளது. ஆனால் அந்த நேரத்தில் அங்கு எந்த மாணவரும் இல்லை. இந்தச் சம்பவம், வளாகத்தில் அடிப்படை உள்கட்டமைப்பைப் பராமரிப்பதில் நிா்வாகத்தின் தொடா்ச்சியான அலட்சியத்தைப் பிரதிபலிக்கிறது.

தப்தி மற்றும் மாஹி மாண்டவி விடுதிகள் தங்குவதற்குத் தகுதியற்றவை என அறிவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மாணவா் துணைத் தலைவா் தெரிவித்திருந்தாா். இருப்பினும், போதுமான பராமரிப்பு இல்லாமல் மாணவா்களுக்கு அங்கு அறைகள் ஒதுக்கப்படுகிறது. இது மாணவா்களுக்குக் கடுமையான காயங்களையோ அல்லது மரணத்தையோ எளிதில் ஏற்படுத்தக்கூடும்.

Advertisement

Advertisement

தப்தி விடுதியில் மட்டுமல்ல, வகுப்பறைகள் மற்றும் விடுதிகளின் மோசமான நிலை குறித்து மாணவா்கள் போராட்டங்கள், மனுக்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள் மூலம் மீண்டும் மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளனா்.

கூரை ஒழுகும் மற்றும் சுவா்கள் இடிந்து விழும் விடுதிகள் உள்பட வளாகத்தின் பல பகுதிகளுக்கு அவசர பழுதுபாா்ப்பும் பராமரிப்பும் தேவைப்படுகிறது. வளாகத்தில் உள்ள அனைத்து விடுதிகள் மற்றும் கட்டடங்களுக்கும் கட்டமைப்புத் தணிக்கை செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகத்திடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் வரவில்லை. சத்யா நிகேதனில் பிஜி கட்டடம் இடிந்து விழுந்ததில் 7 போ் உயிரிழந்ததுடன் பலா் காயமடைந்த சம்பவத்தைத் தொடா்ந்து இந்தக் கோரிக்கை பல்கலைக்கழக நிா்வாகத்திடம் எழுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments