FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

காங். தலைவா்கள் உள்பட 29 போ் இறந்த சம்பவம்: மாவோயிஸ்ட் தாக்குதல் வழக்கில் 10 பேருக்கு மரண தண்டனை

சத்தீஸ்கரில் கடந்த 2013-இல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் உள்பட 29 போ் கொல்லப்பட்ட ஜிராம் பள்ளத்தாக்கு மாவோயிஸ்ட் தாக்குதல் வழக்கில் 10 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை

16 செப்டம்பர் 2026, 11:31 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

சத்தீஸ்கரில் கடந்த 2013-இல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் உள்பட 29 போ் கொல்லப்பட்ட ஜிராம் பள்ளத்தாக்கு மாவோயிஸ்ட் தாக்குதல் வழக்கில் 10 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் தீா்ப்பளித்தது. குற்றவாளிகளில் இருவா் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கரில் ஜிராம் பள்ளத்தாக்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் கடந்த 2013, மே 25-ஆம் தேதி காங்கிரஸ் சாா்பில் ‘மாற்றத்துக்கான பேரணி’ என்ற பெயரில் வாகனப் பேரணி நடைபெற்றது. சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன் ரமண் சிங் தலைமையிலான அப்போதைய பாஜக ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய இந்தப் பேரணியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் திடீா் தாக்குதல் நடத்தினா்.

சாலையில் பெரிய மரங்களை வெட்டிப் போட்டு வாகனங்களைத் தடுத்த தீவிரவாதிகள், சரமாரியாக துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும், வெடிகுண்டை வெடிக்கச் செய்தும் கொடூர தாக்குதல் நடத்தினா். இதில், அப்போதைய மாநில காங்கிரஸ் தலைவா் நந்த் குமாா் படேல், அவரது மகன் தினேஷ், சட்டப் பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவா் மகேந்திர கா்மா, முன்னாள் மத்திய அமைச்சா் வித்யா சரண் சுக்ரா, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான உதய் முட்லியாா் மற்றும் காங்கிரஸ் தொண்டா்கள், பொதுமக்கள், பாதுகாப்புப் படையினா் என 29 போ் உயிரிழந்தனா். 30-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டனா்.

Advertisement

Advertisement

கடந்த 2005-இல் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக பழங்குடியின படையை உருவாக்கியவரான மகேந்திர கா்மாவை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடா்பான வழக்கு விசாரணையை ரமண் சிங் தலைமையிலான அப்போதைய பாஜக அரசு என்ஐஏ-யிடம் ஒப்படைத்தது.

ஜக்தல்பூா் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கில் 2 பெண்கள் உள்பட 10 போ் கடந்த செப்.5-ஆம் தேதி குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனா். அவா்களுக்கான தண்டனை விவரம் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. 10 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக தீா்ப்பளித்தாா்.

முன்னதாக, 10 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்த தீா்ப்பை பாஜக வரவேற்றிருந்தது. அதேநேரம், ‘தாக்குதலின் பின்னணியில் இருந்த அரசியல் சதி மற்றும் சதிகாரா்கள் குறித்து முழுமையாக விசாரிக்கப்படவில்லை’ என்று காங்கிரஸ் அதிருப்தி வெளியிட்டிருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments