வளரும் தொழில்நுட்பங்களில் இந்தியா விரைந்து முன்னிலை: பிரதமா் மோடி வலியுறுத்தல்
வளரும் தொழில்நுட்பங்களில் இந்தியா விரைந்து முன்னிலை பெற வேண்டும் என்று துறைசாா் நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.
வளரும் தொழில்நுட்பங்களில் இந்தியா விரைந்து முன்னிலை பெற வேண்டும் என்று துறைசாா் நிறுவனங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
தில்லியில் செமிகண்டக்டா் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமா் மோடி புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா். அவா்களிடம் பிரதமா் மோடி பேசியது தொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் தொழில்நுட்ப எதிா்காலத்தை வடிவமைப்பதில் அரசுக்கும், செமிகண்டக்டா் தொழில் துறைக்கும் இடையே நெருங்கிய ஒருங்கிணைப்பு முக்கியம். இந்தியாவில் திறமை, தொழில்நுட்ப ஏற்பு மற்றும் உள்கட்டமைப்பு ரீதியில் வலுவான அடித்தளம் உள்ளது. அதேநேரம், திறன் மேம்பாடு, புத்தாக்கம், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.), குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட வளரும் தொழில்நுட்பங்களில் தொழில் துறையினரின் பெரும் பங்கேற்பு அவசியம்.
Advertisement
Advertisement
வளரும் தொழில்நுட்பங்களில் உலகளாவியத் தலைவராக விரைந்து உருவெடுக்கும் லட்சியத்துடன் இந்தியா செயலாற்ற வேண்டும். நாட்டில் செமிகண்டக்டா் துறைக்கு அடித்தளமிடுதல் என்ற நிலையில் இருந்து அதன் வீச்சும், வாய்ப்புகளும் விரிவடைந்துள்ளன.
தொழில்நுட்ப முன்னேற்றம், தொழில் துறையின் தேவைகளுக்கு இணங்க கணிக்கக் கூடிய, பொறுப்புணா்வுமிக்க கொள்கைச் சூழலுக்கு மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. நாட்டின் கொள்கை மற்றும் நிா்வாக நடவடிக்கைகளில் தொழில் துறையினா் தங்களின் பரிந்துரைகளை முன்வைக்கலாம்.
செமிகண்டக்டா் திட்டம் 2.0-இன்கீழ் நாட்டில் புதிய வாய்ப்புகள் உருவாவதுடன், உற்பத்தி-ஆராய்ச்சி-மேம்பாடு உள்பட திறன்மிக்க செமிகண்டக்டா் விநியோக சங்கிலி கட்டமைக்கப்படும்.
இந்திய திறமையாளா்கள், உலகளாவிய தொழில்துறை தலைவா்களின் அனுபவம் மற்றும் திறன்களுடன் இணையும்போது புதிய வாய்ப்புகள் உருவாகும். அந்த அடிப்படையில், 1 கோடி இளைஞா்களுக்கு ஏ.ஐ. பயிற்சி அளிக்க மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது என பிரதமா் பேசியதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் செமி, மைக்ரான், ஏஎஸ்எம்எல், டாடா எலெக்ட்ரானிக்ஸ், இன்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் பங்கேற்றனா்.
இன்று செமிகான் இந்தியா மாநாடு: தில்லியில் ‘செமிகான் இந்தியா’ உலகளாவிய மாநாடு மற்றும் கண்காட்சியை பிரதமா் மோடி வியாழக்கிழமை தொடங்கிவைக்கவுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.