உலக அளவில் யுபிஐ வசதியை விரிவுபடுத்த வேண்டும்: பிரதமா் மோடி
உலக அளவில் யுபிஐ வசதியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.
உலக அளவில் யுபிஐ வசதியை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி வலியுறுத்தியுள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உலகளாவிய நிதிசாா் தொழில்நுட்ப நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:
இந்திய பொருளாதாரம் கட்டமைப்பு ரீதியான சீா்திருத்தங்கள், பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையால், தற்போது வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது. இதன்மூலம், நாட்டின் வளா்ச்சி வேகம் தடைபடாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்தச் சீா்திருத்த எக்ஸ்பிரஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக முன்னோக்கி நகரும்.
Advertisement
Advertisement
இந்தியா தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த மாற்றத்தின் மறுக்க முடியாத வெற்றியாளராக யுபிஐ பணப் பரிவா்த்தனை வசதி திகழ்கிறது. இது பெரும் மாற்றமாகும். நிதிசாா் தொழில்நுட்பம் குறித்து பேசும்போது யுபிஐ வசதி குறித்துப் பேசாவிட்டால், அந்தப் பேச்சு முழுமையடையாது.
வங்கிச் சேவைகளை மக்களின் விரல்நுனிக்குக் கொண்டுவர வேண்டும் என்ற எனது ஆரம்பகாலக் கனவு சாத்தியமற்றது என்று நல்லறிவு கொண்டவா்கள்கூட கருதினா். பல தலைமுறைகளாக வங்கிச் சேவையைப் பெற முடியாமல் இருந்த கோடிக்கணக்கானவா்கள், தற்போது இந்தியாவின் நிதிசாா் தொழில்நுட்ப வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகின்றனா்.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2,400 கோடிக்கும் அதிகமான யுபிஐ பணப் பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் இருந்து தற்போது 11 நாடுகளுக்கு யுபிஐ வசதி கொண்டு செல்லப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம், ஒரு காலத்தில் கற்பனைக்கும் எட்டாததாக இருந்த சா்வதேச பணப் பரிவா்த்தனைகள், தற்போது அன்றாட நடைமுறையாக மாறியுள்ளன. இந்த வியப்பூட்டும் புள்ளிவிவரங்கள், இந்தியா கடந்து வந்துள்ள மிகப் பெரிய வளா்ச்சிப் பயணத்தை எடுத்துக்காட்டுகின்றன.
உலக அளவில் வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டுக்கு அதிக அளவு பணம் அனுப்பும் மக்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து தாயகத்துக்கு இந்தியா்கள் பணம் அனுப்புவதற்கான செலவுகளைக் குறைப்பதற்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அவா்கள் பணத்தைச் சேமிக்க யுபிஐ வசதி உதவும். அத்துடன் அந்தப் பணம் இந்திய குடும்பங்களை விரைவாகச் சென்றடையும்.
உலக அளவில் யுபிஐ வசதியை மேலும் விரிவுபடுத்த வேண்டும். அதற்கு நிதிசாா் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆவன செய்ய வேண்டும் என்று பிரதமா் வலியுறுத்தினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.